ஐ.பி.எல்:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 13 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 14 வது லீக் போட்டி இன்று (ஏப்ரல் 1) நடைபெற்று வருகிறது. இதில் கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாடி வருகிறது.
200 வது போட்டியில் அஸ்வின்:
இந்நிலையில் இன்றைய போட்டியில் அஸ்வின் விளையாடுவதன் மூலம் ஐ.பி.எல்-ல் தன்னுடைய 200 வது போட்டியில் களம் இறங்கி உள்ளார். அதன்படி, ஐ.பி.எல்லில் 200 வது போட்டியில் விளையாடும் 10 வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றிருக்கிறார். 37 வயதான அஸ்வின் முதன் முதலில் கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூலம் ஐ.பி.எல்லின் 2 வது சீசனில் அறிமுகமானார். அந்த வகையில் இதுவரை அவர் விளையாடி உள்ள 199 போட்டிகளில் 743 ரன்கள் மற்றும் 172 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் 2022 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சேர்வதற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளில் விளையாடி இருக்கிறார்.
அதேபோல் 2010 மற்றும் 2011 இல் சென்னை சூப்பர் கிங்ஸுடன் இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை வென்றார். மேலும், 2018 மற்றும் 2019 இல் பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக பணியாற்றினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இதுவரை 32 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தி 287 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 253 போட்டிகளில் விளையாடி, அதில் 223 போட்டிகள் சிஎஸ்கேக்காக விளையாடியவர் என்ற சாதனையை எம்.எஸ் தோனி படைத்துள்ளார்.
தோனிக்கு அடுத்து ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா 245 போட்டிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். நான்காவது இடத்தில் விராட் கோலி 240 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியுள்ளார்.
ரவீந்திர ஜடேஜா (229), ஷிகர் தவான் (220), சுரேஷ் ரெய்னா (205), ராபின் உத்தப்பா (205), அம்பதி ராயுடு (204) ஆகியோரும் ஐபிஎல் போட்டியில் 200 போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ளனர். இதுவரை எந்த ஒரு வெளிநாட்டு வீரரும் ஐபிஎல்லில் 200 போட்டிகளில் விளையாடியதில்லை. 13 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் க்காக 189 ஆட்டங்களில் கீரன் பொல்லார்டு மட்டுமே விளையாடி இருக்கிறார்.
கேப்டனாக 50 வது மேட்சில் ஹர்திக் பாண்டியா:
கடந்த இரண்டு சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் ஹர்திக் பாண்டியா. அந்த வகையில் தான் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் ஐ.பி.எல் சீசனிலேயே அந்த அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொடுத்தார். அதேபோல், 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.
இச்சூழலில்தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிற்கு வந்தார் ஹர்திக் பாண்டியா. இவ்வாறாக இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 3 வது போட்டியில் களம் இறங்குவதன் மூலம் கேப்டனாக 50 வது போட்டியில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.