RR Vs SRH, IPL 2024: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில்,  ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.


ராஜஸ்தான் Vs ஐதராபாத் பலப்பரீட்சை:


வழக்கம்போல் 10 அணிகளுடன் தொடங்கிய, நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 70 லீக் சுற்று போட்டிகள், ஒரு தகுதிச்சுற்று மற்றும் எலிமினேட்டர் போட்டி ஆகியவற்றின் முடிவில், 7 அணிகள் வெளியேற 3 அணிகள் மட்டுமே தற்போது மீதமுள்ளன. அந்த வகையில் கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாடப்போவது யார் என்பதை இறுதி செய்யும், இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இதில் முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோல்வியுற்ற ஐதராபாத் அணியும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியும் மோத உள்ளன. இதில் வெற்றி பெறுவதோடு, இறுதிப்போட்டியிலும் வென்று, இரண்டாவது முறையாக கோப்பையை வெல்ல இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னதாக இரு அணிகளும் தலா இரண்டு முறை, இறுதிப்போட்டியில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


ராஜஸ்தான் Vs ஐதராபாத் நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் ராஜாஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஐதராபாத் அணி 10 முறையும், ராஜஸ்தான் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ராஜஸ்தான் அணி ஐதராபாத்திற்கு எதிராக ஒரு போட்டியில் அதிகபட்சமாக 220 ரன்களையும், குறைந்தபட்சமாக 102 ரன்களையும் சேர்த்துள்ளது. ஐதராபாத் அணி ராஜஸ்தானிற்கு எதிராக ஒரு போட்டியில் அதிகபட்சமாக 217 ரன்களையும், குறைந்தபட்சமாக 127 ரன்களையும் சேர்த்துள்ளது.


ஐதராபாத்தின் பிளே-ஆஃப் வரலாறு:


11 வருடமாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஐதராபாத் அணி, இதுவரை 7 முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதில்,  கடந்த 2016ம் ஆண்டு முதல்முறையாக ஐபில் கோப்பையை வென்றது. அதோடு, பிளே-ஆஃபில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளையும், 7 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்து 3 போட்டிகளிலும், சேஸ் செய்து 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிகபட்சமாக 2016ம் ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிரான ஃபைனலில் 208 ரன்களை சேர்த்தது. குறைந்தபட்சமாக 2017ம் ஆண்டு கொல்கத்தாவிற்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையரில் 128 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக கடந்த 2016ம் ஆண்டில் குஜராத் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையரில், 163 ரன்களை சேஸ் செய்துள்ளது. 2018ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறி, சென்னையிடம் தோல்வியுற்றது.


ராஜஸ்தானின் பிளே-ஆஃப் வரலாறு:


15 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ராஜஸ்தான் அணி, இதுவரை 6 முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதோடு, ஐபிஎல் தொடர் அறிமுகமான முதல் ஆண்டிலேயே கோப்பையை வென்று வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது. பிளே-ஆஃபில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி தலா 5 வெற்றி மற்றும் 5 தோல்விகளை பதிவு செய்துள்ளது. பிளே-ஆஃப் வரலாற்றில் அதிகபட்சமாக, 2008ம் ஆண்டு டெல்லி அணிக்கு எதிரான அரையிறுதியில் 192 ரன்களை குவித்துள்ளது. குறைந்தபட்சமாக, 2015ம் ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிரான எலிமினேட்டரில்109 ரன்களை சேர்த்துள்ளது. கடைசியாக 2022ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறி, குஜராத்திடம் தோல்வியுற்றது.