நடப்பு ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சீசனில் களமிறங்கியுள்ள 10 அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்க தீவிரமாக விளையாடி வருகின்றது. இதுவரை மொத்தம் 19 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. நடப்பு தொடரில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள் என்றால் அவற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் முதல் இரு இடங்களில் இருக்கும். காரணம், இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியைச் சந்திக்காமல் விளையாடி வருகின்றது. 


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்கு போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கெத்தாக முதல் இடத்தில் உள்ளது. முதல் மூன்று போட்டிகளில் ஃபார்ம் அவுட்டில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி ஃபார்முக்கு வந்துள்ளார். அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றியை தனதாக்கியுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 


சென்னை அணியைப் பொறுத்தவரையில் நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் சந்தித்து நான்கு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேபோல், நான்காவது இடத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 


புள்ளிப்பட்டியல் (ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்குப் பின்)




நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை வெற்றியைப் பதிவு செய்யாத அணி என்றால் அது, ஐந்து முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. மேலும் இதுவரை அதிக போட்டிகளில் விளையாடியுள்ள அணி என்றால் அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிதான். இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு ஒரு போட்டியில் வெற்றி பெற்று, நான்கு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. 


இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள அணி என்றால் அது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைக் கூறலாம். இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றியும் இரண்டு போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. பேட்கம்மின்ஸ் தலைமையிலான இந்த அணி அதிரடியான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. 


ஆரஞ்சு - ஊதா தொப்பிகள்


அதிக ரன்கள் எடுப்பவருக்கு கொடுக்கப்படும் ஆரஞ்சு நிறத் தொப்பி தற்போது விராட் கோலி வசம் உள்ளது. பெங்களூரு அணியின் தொடக்க வீரராக உள்ள விராட் கோலி இதுவரை ஐந்து போட்டிகளில் இரண்டு அரைசதம் மற்றும் ஒரு சதம் உட்பட மொத்தம் 316 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிறத் தொப்பியை தன்வசப்படுத்தியுள்ளார். அதேபோல் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றும் வீரருக்கு கொடுக்கப்படும் ஊதா நிறத் தொப்பியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹால் வைத்துள்ளார். அவர் 4 போட்டிகளில் விளையாடி, 8 விக்கெட்டுகளை கைப்பற்றி ஊதா நிறத் தொப்பியை தன்வசம் வைத்துள்ளார்.