நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு அணியும் வெற்றிக்கணக்கைத் தொடங்கி புள்ளிப்பட்டியலில் முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில், வெற்றிக்கணக்கைத் துவங்காமல் புள்ளிப்பட்டியலில் உறங்கிக் கொண்டு இருக்கும் அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணிதான். இதற்கு காரணம் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவின் தவறான முடிவுகள் என கூறப்படுகின்றது. 


இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும் 9வது இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இன்று அதாவது ஏப்ரல் 7ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த போட்டி 20வது லீக் போட்டி ஆகும். இந்த போட்டி சரியாக பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது. 


டெல்லி கேப்பிடல்ஸ் அணியைப் பொறுத்தவரையில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் வெற்றியை தனதாக்கியுள்ளது. மூன்று போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ள டெல்லி அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. டெல்லி அணியைப் பொறுத்தவரையில் இன்றைய போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மிட்ஷெல் மார்ஷ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் காயம் காரணமாக விளையாடமாட்டார் என டெல்லி அணியின் தலைமை இயக்குநர் சவுரவ் கங்குலி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். 


மும்பை அணியைப் பொறுத்தவரையில் முதல் மூன்று போட்டிகளிலும் காயம் காரணமாக விளையாடாத சூர்யகுமார் யாதவ் அணிக்கு திரும்பியுள்ளது அணிக்கு பலமாக பார்க்கப்படுகின்றது. 


இரு அணிகளும் இதுவரை மொத்தம் 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் மொத்தம் எட்டு போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தியுள்ளது. இதிலும் மும்பை அணியின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. மும்பை அணி ஐந்து போட்டிகளிலும் டெல்லி அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. 


புள்ளிக்கணக்கைத் தொடங்காத மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஒரு வெற்றியைப் பெற்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இன்றைய போட்டி முக்கியமானது என்பதால், இன்றைய போட்டியை மிகவும் சுவரஸ்யமான போட்டியாக எதிர்பார்க்கலாம். அதேபோல் வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என்பதால் இந்த போட்டியை ஹை - ஸ்கோரிங் ஆட்டமாகவும் எதிர்பார்க்கலாம். முதலில் பேட்டிங் செய்யும் அணி குறைந்தபட்சம் 170 முதல் 190 ரன்கள் வரையும் அதிகபட்சம் 200 முதல் 220 வரையும் குவிக்க வாய்ப்புள்ளது. 


இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறும். இதில் முதல் போட்டியில் மும்பை மற்றும் டெல்லியும் இரண்டாவது லீக் போட்டியில் குஜராத் மற்றும் லக்னோவும் மோதுகின்றது.