ஐ.பி.எல். தொடர் லீக் ஆட்டங்கள் அனைத்தும் நிறைவு பெற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதரபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் தகுதி பெற்றுள்ளது.
இதில் தொடரின் அடுத்த கட்டமான ப்ளே ஆஃப் தொடர் நாளை தொடங்குகிறது. நாளை நடக்கும் குவாலிபயர் ஆட்டத்திற்கு பிறகு, இதையடுத்து, வரும் 22ம் தேதி எலிமினேட்டர் ஆட்டம் நடக்கிறது. இந்த போட்டிக்கு பிறகு குவாலிபயர் 2ம் போட்டி நடக்கிறது.
இந்த முறை ஐ.பி.எல். தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் சென்றுள்ள நான்கு அணிகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் விவரங்களை கீழே காணலாம்.
வருண் சக்கரவர்த்தி ( கொல்கத்தா நைட் ரைடர்ஸ்):
ஐ.பி.எல். தொடரில் நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்ல வாய்ப்பு பெற்றுள்ள, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள கொல்கத்தா அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி இடம்பிடித்துள்ளார். அந்த அணியின் முக்கியமான சுழற்பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்தி இதுவரை 68 போட்டிகளில் ஆடி 80 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கொல்கத்தாவின் முக்கிய வீரராக அவர் திகழ்ந்து வருகிறார்.
நடராஜன் ( சன்ரைசர்ஸ் ஹைதரபாத்):
இந்த தொடர் தொடங்கியது முதலே அதிரடியாக ஆடி வரும் அணி சன்ரைசர்ஸ் அணி. புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் அணிக்கும் குவாலிபயர் போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது. நடராஜன் சன்ரைசர்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இந்திய அணிக்காக ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள நடராஜன் 58 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 65 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் ( ராஜஸ்தான் ராயல்ஸ்):
37 வயதான அஸ்வின் உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஆவார். பேட்டிங், பவுலிங்கிலும் அசத்தக்கூடிய வீரரான அஸ்வின் இதுவரை 209 ஐ.பி.எல்.போட்டிகளில் ஆடி 800 ரன்களை எடுத்துள்ளார். 178 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி பல்வேறு சாதனைகளையும் புரிந்தவர் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.
தினேஷ் கார்த்திக் ( ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், ஆர்.சி.பி. அணியின் ஃபினிஷராகவும் திகழ்பவர் தினேஷ் கார்த்திக். ஆர்.சி.பி. அணியின் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக உலா வரும் இவர் இந்திய அணிக்காக தோனி ஆடுவதற்கு முன்பே அறிமுகமானவர். இவர் 256 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 831 ரன்களை எடுத்துள்ளார். அதில் 22 அரைசதங்கள் அடங்கும்.
இவ்வாறு இந்த முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நான்கு அணிகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இருப்பது தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் எந்த அணி வெற்றி பெற்றாலும் தமிழக வீரர் ஐ.பி.எல், கோப்பையை ஏந்துவது உறுதியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.