MS Dhoni Retirement: ஐபிஎல் 2024 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படியாவது பிளே ஆஃப் சென்றுவிடும் என்று அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் நம்பி இருந்தனர். ஆனால், ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. 


இதனால் பிளே ஆஃப் கனவுடன் இருந்த எம்.எஸ் தோனி உள்பட சென்னை அணி வீரர்களும், ரசிகர்களும் மனமுடைந்தனர். எம்.எஸ்.தோனி, சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் போனதால், அழுததாக சில புகைப்படங்கள் வைரலாகின. 






மேலும், போட்டியின் முடிவுக்கு பிறகு எம்.எஸ்.தோனி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்களிடம் கை குலுக்காமல் சென்ற வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பிறகு, சில கிரிக்கெட் விமர்சகர்கள் தோனிக்கு உடல்நிலை பிரச்சனை காரணமாகவே டிரஸ்ஸிங் ரூமிற்கு சென்றார் என்று தெரிவித்தனர். இந்தநிலையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எம்.எஸ். தோனியில் இறுதி ஐபிஎல் போட்டியாக இருக்கக்கூடும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #Thanksmsdhoni என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். 


எம்.எஸ்.தோனியின் ஓய்வு:


இந்த சூழலில் தற்போது எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “ எம்.எஸ்.தோனி அவரது ஓய்வு குறித்து எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. எப்படியும் அப்படிப்பட்ட விஷயங்களை தோனி எங்களிடம் கூறமாட்டார். அவர்தான் முடிவு செய்வார். 


இந்த சீசனில் அவர் பேட்டிங் செய்த விதத்தை பார்க்கும்போது, தோனியால் மற்றொரு சீசன் விளையாட முடியும் என்று நினைக்கிறோம். ஆனால் ஓய்வோ, விளையாடும் முடிவோ அவரை பொறுத்தது” என்று தெரிவித்துள்ளார். 


இந்திய அணிக்கான இரண்டு உலகக் கோப்பையை வென்றவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்தவருமான எம்.எஸ். தோனி, திடீர் ஓய்வு முடிவுகளால் ரசிகர்களை அதிர்ச்சியில் பலமுறை ஆழ்த்தியுள்ளார். 


டெஸ்ட் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த டிசம்பர் 30, 2024ல் ஓய்வை அறிவித்த தோனி, கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 


சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் பல குழு உறுப்பினர்கள் தொடர்ந்து வலி இருந்தாலும் தோனி, தனது ரசிகர்களுக்காக விளையாடி வருகிறார். அவரது காயம் பெரிதாகி விடக்கூடாது என்பதற்காவே தோனியை கடைசியில் களமிறக்கினோம் என்று ஃப்ளெமிங் ஒப்புக்கொண்டார். 


ஐபிஎல் 2024 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக, மகேந்திர சிங் தோனி முக்கியமான நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடினார். 11 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்ய உள்ளே வந்த எம்.எஸ்.தோனி  220.54 என்ற ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 53.66 என்ற சராசரியுடன் 161 ரன்கள் எடுத்தார்.