IPL 2024 Playoff: ஐபிஎல் தொடர்ன் லீக் சுற்றின் முடிவில் கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.


ஐபிஎல் பிளே-ஆஃப் போட்டிகள்:


நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் 70 போட்டிகளின் முடிவில் பெரும் இழுபறிக்கு பிறகு நான்கு அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. கொல்கத்தா அணி 9 போட்டிகளில் வெற்றி மற்றும் 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது என, 20 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா 8 வெற்றிகள் மற்றும் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது என,  17 புள்ளிகளுடன் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தன.  


பெரும் இழுபறிக்கு பிறகு கடைசி லீக் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி, பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலில் நான்காவதை இடத்தை பிடித்தது. நடப்பாண்டு பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நான்கு அணிகளில், பெங்களூர் அணி மட்டுமே இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நாளை முதல் பிளே-ஆஃப் சுற்று போட்டிகள் தொடங்க உள்ளன.


குவாலிபையர் - 1: கொல்கத்தா Vs ஐதராபாத்


பிளே-ஆஃப் சுற்றின் முதல் குவாலிபையர் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள, நரேந்திர மோடி மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் மோத உள்ளன.


இதில் வெற்றி பெறும் அணி வரும் 26ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கு நேரடியாக் தகுதி பெறும்.


எலிமினேட்டர்: ராஜஸ்தான் Vs  பெங்களூர்


பிளே-ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள, நரேந்திர மோடி மைதானத்தில் வரும் 22ம் தேதி 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முறையே மூன்று மற்றும் நான்காவது இடத்தை பிடித்த ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது குவாலிபையர் போட்டிக்கு தகுதி பெறும்.


தோல்வியுற்ற அணி தொடரிலிருந்து வெளியேறும்.


குவாலிபையர் - 2: 


இரண்டாவது குவாலிபையர் போட்டியில் முதல் குவாலிபையரில் தோல்வியுற்ற அணியும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியும் மோதும். இதில் வெற்றி பெறும் அணி 26ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இரண்டாவது குவாலிபையர் போட்டி வரும் 24ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில், இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


இறுதிப்போட்டி:


நடப்பாண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றப்போவது யார் என்பதை உறுதி செய்யும் இறுதிப்போட்டி, வரும் 26ம் தேதி மாலை 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் தொடங்க உள்ளது. இதில் இரண்டு குவாலிபையர் போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணிகள் மோத உள்ளன.