17வது ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவ்ந்திரா மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து விச முடிவு செய்தது. இதனால் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டினை இழந்து 192 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 78 ரன்கள் சேர்த்தார். பஞ்சாப் அணி தரப்பில் ஹர்ஷல் பட்டேல் மூன்று விக்கெட்டுகளும் சாம் கரன் இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அடுத்து 193 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களமிறங்கியது. பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. அணியின் ஸ்கோர் ஆட்டத்தின் மூன்றாவது பந்தில் 10 ரன்களாக இருந்தபோது ப்ரப்சிம்ரன் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அடுத்த ஓவரில் ரீலீ ரோசோவ் தனது விக்கெட்டினை இழந்தார். ப்ரப் சிம்ரன் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் கோட்ஸீ பந்தில் ஆட்டமிழந்தார். அதேபோல் ரீலீ ரோசோவ் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் பும்ராவின் யார்க்கர் பந்தில் க்ளீன் போல்ட் ஆனார். இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் பும்ராவின் வேகத்திற்கு சாம் கரன் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் லிவிங்ஸ்டன் தனது விக்கெட்டினை கோட்ஸி பந்தில் அவரிடமே இழந்து வெளியேறினார்.
பொட்டலம் கட்டப்பட்ட பஞ்சாப் டாப் ஆர்டர்
இதனால் பஞ்சாப் அணி 14 ரன்களுக்கு 4 விக்கெட்டுளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது. அதன் பின்னர் பவர்ப்ளே முடிந்து 7வது ஓவரின் கடைசி பந்தில் பஞ்சாப் அணியின் இம்பேக்ட் ப்ளேயர் ஹர்ப்ரீத் சிங் பாடியா தனது விக்கெட்டினை ஸ்ரேயாஸ் கோபால் பந்தில் அவர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா தனது விக்கெட்டினை 9 பந்துகளுக்கு 9 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அடுத்து களத்தில் இருந்த ஷஷாங்க் சிங்குடன் இணைந்த அதிரடி ஆட்டக்காரர் அஷுதோஷ் சர்மா அதிரடியாக பவுண்டரிகளை விளாசிவந்தார். இவர்கள் இருவரும் தவித்துக்கொண்டு இருந்த பஞ்சாப் அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியை சிறப்பாகச் செய்தனர். அணியின் ஸ்கோர் 111 ரன்களாக இருந்தபோது ஷஷாங்க் சிங் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
நம்பிக்கையான பார்ட்னர்ஷிப்
இதனால் அணியின் நம்பிக்கையாக இருந்தது அஷுதோஷ் சர்மா மட்டும்தான். அதனை புரிந்து கொண்ட அஷுதோஷ் சர்மாவும் அதிரடியாக விளையாடினார். மும்பை அணியின் அசகாய பவுலர்கள் எனப்பட்ட பும்ரா, கோட்ஸீ, மத்வால் ஓவரில் சிக்ஸர்கள் விளாசி மிரட்டினார். பும்ரா வீசிய யார்க்கர் பந்தினை ஃபைன் லெக் திசையில் முட்டி போட்டு சிக்ஸர் விளாசி ஒட்டுமொத்த மும்பை அணியையும் மிரளவைத்தார்.
15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் வெற்றிக்கு அடுத்த ஐந்து ஓவர்களில் 52 ரன்கள் தேவைப்பட்டது. 16வது ஓவரை வீசிய தாராள மனம் படைத்த மத்வால் மூன்று வைய்டு, ஒரு நோ-பால், மூன்று சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 24 ரன்களை வாரிக்கொடுத்தார். இதனால் பஞ்சாப் அணிக்கு அடுத்த 4 ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்டது. 17வது ஓவரை பும்ரா கட்டுக்கோப்பாக வீசி மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
போராடி வென்ற மும்பை
இதனால் பஞ்சாப் அணிக்கு அடுத்த மூன்று ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. 18வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் மன்னன் அஷுதோஷ் சர்மா தனது விக்கெட்டினை இழக்க, இந்த ஓவரை வீசிய கோட்ஸீ இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அஷுதோஷ் சர்மா 28 பந்தில் இரண்டு பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் விளாசி 61 ரன்னில் தனது விக்கெட்டினை இழந்தார். இதனால் கடைசி இரண்டு ஓவரில் 23 ரன்கள் பஞ்சாப் அணிக்கு தேவைப்பட்டது. 19வது ஓவரை வீசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட்டினை கைப்பற்றியதுடன் 11 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. 20வது ஓவரின் முதல் பந்தினை மத்வால் வைடாக வீச, அடுத்த பந்தை எதிர்கொண்ட ரபாடா அடித்துவிட்டு இரண்டு ரன்களுக்கு ஓட, அதற்குள் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் மும்பை அணி 19.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் சேர்த்தது. இதனால் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.