முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் நடப்பு ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் மோதிக்கொண்டது. இந்த போட்டி சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவ்ந்திரா மைதனாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி தனது சொந்த மைதானத்தில் இலக்கை துரத்துவதாக அறிவித்தது. அதாவது மும்பை அணிக்கு எதிராக பந்து வீசுவதாக அறிவித்தது. 
அதன்படி மும்பை அணியின் இன்னிங்ஸை ரோகித் சர்மாவும் இஷான் கிஷனும் தொடங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தில் விளையாடிக்கொண்டு இருக்க, மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் இஷான் கிஷன் தனது விக்கெட்டினை சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து வெளியேறினார். 


அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் தனது முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ரோகித் சர்மா அதிகமாக சூர்யகுமார் யாதவிற்கு ஸ்ட்ரைக் கொடுத்து விளையாடிவந்தார். இதனால் சூர்யகுமார் யாதவ் தனது அரைசதத்தினை எட்டினார். 34 பந்தில் தனது அரைசதத்தினை எட்டிய சூர்யகுமார் யாதவ், சிறப்பாக் விளையாடி வந்தார். மறுமுனையில் இருந்த ரோகித் சர்மா அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி வந்தார். 


மும்பை அணி 10 ஓவர்கள் முடிவில் 86 ரன்கள் சேர்த்திருந்தது. ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் கூட்டணி சிறப்பாக விளையாடி வந்ததால் பஞ்சாப் அணிக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்தனர். ஆட்டத்தின் 12வது ஓவரை வீசிய பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்தில் தனது விக்கெட்டினை 36 ரன்னில் இழந்து வெளியேறினார். அதே ஓவரில் மும்பை அணி தனது 100வது ரன்னை எட்டியது. 


ரோகித் சர்மா வெளியேறியதற்குப் பின்னர், சூர்யகுமாருடன் திலக் வர்மா இணைந்தார். ஆடுகளம் நேரம் செல்லச் செல்ல பேட்டிங்கிற்கு சவாலாக இருந்ததால், அணியின் ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. ரோகித் சர்மா தனது விக்கெட்டினை இழந்த பின்னர், ஆட்டத்தின் 15வது ஓவரில் திலக் வர்மா பவுண்டரிகளை அடுத்தடுத்து விளாசினார். அதே ஓவரில் சூர்யகுமார் யாதவ் ஒரு பவுண்டரி விளாச, 15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 130 ரன்கள் சேர்த்தது. 


அடுத்த ஓவரில் இருந்து மும்பை அணி அதிரடி ஆட்டத்தினை தொடங்கியது. இதனால் மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டினை 53 பந்தில் 78 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவும் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். 


ஆனால் ஹர்திக் பாண்டியா 10 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறியதால், களமிறங்கினார் சிக்ஸர் மன்னன் டிம் டேவிட். ஆட்டத்தின் 19வது ஓவரில் இரண்டு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் விளாசினார் டிம் டேவிட். இதனால் அணியின் ஸ்கோரும் உயர்ந்து. 20வது ஓவரில் டிம் டேவிட் சிக்ஸர் விளாச முயற்சி செய்து தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஷெப்பர்ட் ஒரு ரன்னில் அவுட் ஆனார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் சேர்த்தது.