நடப்பு ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத களமிறங்கியுள்ளது. சண்டிகரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற  பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 


இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்


இரு அணிகளும் ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து விளையாடி வருகின்றது. இதுவரை மொத்தம் 31 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 


நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் தலா ஆறு போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில் இரு அணிகளும் நான்கு போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. 


நடப்புத் தொடரில் மும்பை இதுவரை..


நடப்புத் தொடரில் மும்பை அணி விளையாடியுள்ள ஆறு போட்டிகளில் ஹைதராபாத், சென்னை, டெல்லி, குஜராத், பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாடியுள்ளது. இதில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிராக மட்டும் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில் குஜராத், ஹைதரபாத், ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிக்கு எதிராக தோல்வியைச் சந்தித்து, புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. 


மும்பை அணியைப் பொறுத்தவரை பும்ரா பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை அள்ளினார். அதேபோல், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசியிருந்தார். 


நடப்புத் தொடரில் பஞ்சாப் அணி இதுவரை.. 


மும்பை அணியைப் போல் பஞ்சாப் அணியும் இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் டெல்லி, பெங்களூரு, லக்னோ, குஜராத், ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாடியுள்ளது. இதில் டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத், லக்னோ பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக தோல்வியைச் சந்தித்துள்ளது. 


இரு அணிகளும் தோல்வியைச் சந்தித்து வந்திருப்பதால் இன்றைய ஆட்டத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பும் அணி எது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரவாக உள்ளது.