வருகின்ற மார்ச் மாதம் இறுதியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 17வது சீசன் தொடங்குகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக, சர்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. 


கடந்த சீசனில் அதாவது 2023ம் ஆண்டு ஹைதராபாத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற எய்டன் மார்க்ரம், தற்போது மீண்டும் வீரராக விளையாட இருக்கிறார். ஐபிஎல் 2024க்கான மினி ஏலத்தில் கம்மின்ஸை ஹைதராபாத் அணி 20.50 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இந்த விலைக்கு பேட் கம்மின்ஸை ஹைதராபாத்தை வாங்கியதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். 






அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஹைதராபாத்: 


கம்மின்ஸை அதிக தொகைக்கு வாங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டனாக, தற்போது அவருக்கு புதிய பொறுப்பை அளித்தது. இதுகுறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சமூக வலைதளங்களில், “ எங்கள் புதிய கேப்டன் பாட் கம்மின்ஸ்” என்று எழுதி இருந்தது. 


கடந்த சீசனில் ஹைதராபாத் மிக மோசமான ஆட்டம்: 


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் 2023ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா வீரர் எய்டன் மார்க்ரமின் கேப்டன்சியின் கீழ் விளையாடியபோது மிகவும் மோசமாக செயல்பட்டது. மார்க்ரம் தலைமையிலான அணி 14 லீக் போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், 8 புள்ளிகளை மட்டுமே பெற்ற ஹைதராபாத் அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடம் அதாவது 10வது இடத்தையே பிடித்தது. கடந்த சீசனில் ஹைதராபாத் அணியின் மோசமான ஆட்டத்தால் அணி நிர்வாகம் இந்த மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. பேட் கம்மின்ஸ் தற்போது வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர். கம்மின்ஸ்  தலைமையின் கீழ், கடந்த 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. 


ஹைதராபாத் தலையெழுத்தை மாற்றுவாரா கம்மின்ஸ்..? 


கம்மின்ஸ் தலைமையின்கீழ் ஆஸ்திரேலிய அணி கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாகவே செயல்பட்டது. ஒருநாள் உலகக் கோப்பை 2023க்கு முன் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை டெஸ்ட் சாம்பியனாக்கினார் கம்மின்ஸ். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த முறை கம்மின்ஸ் தனது கேப்டன்சியில் ஹைதராபாத்தை சாம்பியனாக்குவார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். கம்மின்ஸ் தலைமையில் ஹைதராபாத் அணியால் என்ன செய்ய முடியும் என்பது இப்போது சுவாரஸ்யமாக இருக்கும். 






முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி நியமனம் செய்தது. டேனியல் வெட்டோரிக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா கடந்த சீசன் வரை இந்தப் பொறுப்பை சிறப்பாகச் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.