இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் மார்ச் 22ம் தேதி (நாளை) முதல் தொடங்கவுள்ளது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஐபிஎல் நிர்வாகம் ஒரு வண்ணமயமான நிகழ்ச்சி ஒன்றை, போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடக்க விழாவில் சிறப்புமிக்க பல திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்க இருக்கின்றனர். மேலும், இந்த தொடக்க விழா 30 நிமிடங்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 


பதவியேற்பு விழாவில் எந்த சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்..? 


ஐபிஎல் 2024 தொடக்க விழாவில் அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெரப் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த இரு நடிகர்களும் இணைந்து நடித்த புதிய படமான ‘படே மியான் சோட்டே மியான்’ வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது.  அந்த படத்தை ப்ரோமோட் செய்து விதமாகவும், தொடக்க விழாவில் கலந்து கொண்டு நடனம் ஆட இருக்கின்றனர். 


இது தவிர, இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான், சோனு நிகம் ஆகியோரும் இந்த தொடக்க விழாவின் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கின்றன. அவர்களது இசை நிகழ்ச்சி எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திற்கு மேலும் அழகை சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், ஸ்டேடியத்தில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஸ்டேடியத்தின் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஸ்டேடியத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்காக ஏராளமான எல்.இ.டி திரையரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.






சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி எப்போது தொடங்கும்..?


ஐபிஎல் 2024ல் மார்ச் 22ம் தேதி தொடக்க விழா நேரம் பிற்பகல் 3.30 மணிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், போட்டி வழக்கம்போல் இரவு 7.30 மணிக்கே டாஸ் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, ஐபிஎல் 2024ன் முதல் நாளில் தொடக்க விழா நடைபெற உள்ளதால், சிஎஸ்கே vs ஆர்சிபி போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.  


கடந்த சீசனில் கலக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்:


ஐபிஎல் 2023ல் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சாதனையை படைத்துள்ளது. இது தவிர, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிகபட்சமாக இரண்டு முறை பட்டம் வென்றுள்ளது. தோனி தலைமையில் 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றுள்ளது. அதேசமயம், ரோஹித் சர்மாவின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் ஆகியுள்ளது.