17வது ஐபிஎல் தொடரின் 63வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 8வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுவதாக இருந்தது. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்தப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, வீரர்களும் ரசிகர்களும் மைதானத்திற்கு வந்துவிட்டனர். 


போட்டி நேரத்திற்கு முன்பாக இருந்தே கனமழையும், மின்னலும் கலந்த மிகவும் மோசமான வானிலை நிலவியதால், குறித்த நேரத்தில் டாஸ் போடப்பட முடியவில்லை. தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்ததால் போட்டி எப்படியாவது நடக்கும் என ரசிகர்களும் போட்டி நடைபெற்று வெற்றி பெற்றால் தொடர்ந்து ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணியாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையில் குஜராத் வீரர்களும் இருந்தனர். 




ஆனால் மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது. குறிப்பாக இரவு 10.56 மணிக்கு போட்டி தொடங்கினால் கூட 5 ஓவர்கள் போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால், போட்டி டாஸ் போடாமலே கைவிடப்பட்டது. இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தினை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. ஆனால் போட்டி கைவிடப்பட்டதால் குஜராத் அணி 13 போட்டிகளில் பங்கேற்று 5 போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியும் சந்தித்ததோடு ஒரு போட்டி நடத்தப்படாமல் கைவிடப்பட்டதால் 11 புள்ளிகளைப் பெற்றதுடன், நடப்புத் தொடரில் இருந்து வெளியேறிய மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ளது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் எலிமினேட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 






குஜராத் அணி தனது அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வரும் 16ஆம் தேதி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்திலும், கொல்கத்தா அணி வரும் 19ஆம் தேதி ராஜஸ்தான் அணியை கவுஹாத்தியிலும் எதிர்கொள்ளவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் மழை காரணமாக கைவிடப்பட்ட முதல் போட்டி இதுதான். 


ஐபிஎல் அட்டவணைப்படி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அவர்களது சொந்த மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டமாக இந்த போட்டி அட்டவணையிடப்பட்டது. ஆனால் ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்ட பின்னர் குஜராத் அணி வீரர்கள் தங்களது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதாமாக மைதானத்தைச் சுற்றி வந்தனர்.