ஐ.பி.எல் 2024:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ப்ளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பை கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பெற்றுள்ளன.


டெல்லி கேபிடல்ஸ் , குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடரை விட்டு வெளியேறிவிட்டன. இச்சூழலில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.


முன்னதாக இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோகித் சர்மா சரியாக விளையாடவில்லை என்றும் அவர் அவுட் ஆப் பார்மில் இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் சிலர் கூறிவருகின்றனர். ஆனால், அவர் இந்த சீசனில் மும்பை அணிக்காக தன்னுடைய சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார். அது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


அதிக ரன்கள் குவித்த ரோகித் சர்மா:


இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மொத்தாம் 14 லீக் ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார் ரோகித் சர்மா. அந்தவகையில் மொத்தம் 417 ரன்களை குவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களில் அதிக ரன்களை இந்த சீசனில் குவித்த வீரராக ரோகித் சர்மா தான் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் திலக் வர்மா உள்ளார். மொத்தம் 13 போட்டிகள் விளையாடி உள்ள அவர் 416 ரன்கள் எடுத்துள்ளார்.


தனிநபர் அதிகபட்சம்:


மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களில் தனிநபர் அதிகபட்ச ரன்களை விளாசிய வீரராகவும் ரோகித் சர்மா தான் உள்ளார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 105* ரன்களை விளாசி முதல் இடத்தை தக்கவைத்துள்ளார். சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது 63 பந்துகள் களத்தில் நின்ற ரோகித் சர்மா 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 105 ரன்கள் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மாவிற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இவரின் தனிநபர் அதிகபட்ச ரன் 102* ரன்கள். 


அதிக பவுண்டரிகள் - சிக்ஸர்கள்:


ரோகித் சர்மா நன்றாக விளையாடவில்லை என்ற மாயபிம்பத்தை உருவாக்குபவர்களுக்கு அவ்ர் பேட்டால் நல்ல பாடம் சொல்லி இருக்கிறார். அதிக ரன்கள் விளாசிய வீரர், தனிநபர் அதிகபட்சம் மட்டும் இன்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக பவுண்டரிகள் மற்றும் அதிக சிக்ஸர்கள் விளாசிய ஒரே வீரரும் ஹிட்மேன் ரோகித் சர்மா தான். 


இந்த சீசனில் மட்டும் அவர் 45 பவுண்டரிகளை விளாசி இருக்கிறார். அதேபோல் 23 சிக்ஸர்களை பறக்கவிட்டு இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் தான் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருக்கின்றனர். இளம் வீரர்கள் எத்தனை பேர் மும்பை அணியில் இருந்தாலும் கிரிக்கெட்டில் நானும் இளைஞன் தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஹிட்மேன் ரோகித்சர்மா.


மேலும் படிக்க: IPL CSK vs RCB: தினேஷ் கார்த்திக் எனும் போராளிக்கு இன்றுதான் கடைசி ஆட்டமா? சோகத்தில் ரசிகர்கள்..


மேலும் படிக்க: Watch Video : பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க