நடப்பு ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐ.பி.எல். தொடரில் இன்று முக்கியமான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலே ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்று விடும் சூழலில் சென்னை அணியும், குறிப்பிட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற கட்டாயத்தில் பெங்களூர் அணியும் களமிறங்குகின்றன.


இன்றுதான் கடைசி போட்டி?


இந்த சீசன் பெரும்பாலான சீனியர் வீரர்களுக்கு கடைசி தொடராக இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி இருக்கிறது. குறிப்பாக, 42 வயதான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருவேளை இன்றைய போட்டியில் தோற்று சென்னை அணி வெளியேறினால் தோனிக்கு இது கடைசி போட்டியாக இருக்க வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.


அதேசமயம், தோனியின் ஓய்வைப் பற்றி பேசும் நாம் பலரும் தினேஷ் கார்த்திக்கை மறந்துவிடுகிறோம். தினேஷ் கார்த்திக் ஏற்கனவே இதுதான் தன்னுடைய கடைசி சீசன் என மறைமுகமாக தெரிவித்துவிட்டார். சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியிலே ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஆர்.சி.பி. தகுதி பெறாவிட்டால் இதுதான் சென்னையில் தனது கடைசி போட்டி என்று தனது ஓய்வு குறித்து கூறியிருந்தார்.


தோனியை போல ஃபினிஷர்:


இந்திய அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளாத திறமையான கிரிக்கெட் வீரர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். எம்.எஸ்.தோனிக்கு முன்பே இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகமான தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்புகள் நிலையாக கிடைக்காததும் அவரால் இந்திய அணியில் பெரியளவில் சாதிக்க முடியாததற்கு காரணம். கிரிக்கெட் வீரரில் இருந்து வர்ணணையாளராக மாறிய அவரை மீண்டும் கிரிக்கெட் வீரராக அழைத்து வந்து மிகச்சிறந்த ஃபினிஷர் என்று உலகிற்கு அடையாளம் காட்டியது ஆர்.சி.பி.


ஐ.பி.எல். தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக ஆடியுள்ள தினேஷ் கார்த்திக் பெங்களூர் அணிக்காக ஆடத் தொடங்கிய பிறகு விராட் கோலி, கெயில், டிவிலியர்ஸ் போன்று ஆர்.சி.பி.யின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டார்.  2008ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். ஆடி வரும் தினேஷ் கார்த்திக் முதன்முதலாக டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக அறிமுகமானார்.


இதுவரை அவர் 255 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 232 இன்னிங்சில் பேட்டிங் செய்து 4 ஆயிரத்து 817 ரன்களை எடுத்துள்ளார். கொல்கத்தா அணிக்காக ஆடியபோது அதிகபட்சமாக அவர் 97 ரன்களை எடுத்ததே அவரது ஐ.பி.எல். அதிகபட்சம் ஆகும்.


6 அணிகளுக்காக ஆடி அசத்தல்:


அனைத்து ஐ.பி.எல். தொடரிலும் ஆடியுள்ள தினேஷ் கார்த்திக் முதன்முதலாக டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடினார். பின்னர், 2011ம் ஆண்டு அவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். அங்கு இரண்டு சீசன்கள் ஆடிய அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பின்னர் ஆடினார். அங்கிருந்து அவர் டெல்லி அணிக்கே 2014ம் ஆண்டு மீண்டும் ஏலத்தில் எடுக்கப்பட்டார். 2015ம் ஆண்டு பெங்களூர் அணிக்காக முதன்முதலாக ஆடிய தினேஷ் கார்த்திக், குஜராத் லயன்ஸ் அணிக்காக 2016 மற்றும் 2017ம் ஆண்டு ஆடினார். அதன்பின்பு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டார். கொல்கத்தா அணிக்காக கேப்வன்சியும் அவர் செய்துள்ளார்.


2022ம் ஆண்டு பெங்களூர் அணிக்காக தினேஷ் கார்த்திக் 5.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டபோது பலரும் விமர்சித்தனர். ஆனால், 2022ம் ஆண்டு ஃபினிஷராக அவர் அசத்திய காரணத்தால் அவருக்கு உலகக்கோப்பை டி20 போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீசனில் 288 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய அவர் 35 பந்துகளில் 5 பவுண்டரி 7 சிக்ஸர்களுடன் 83 ரன்கள் விளாசி ஹைதரபாத்தை கதிகலங்க வைத்ததை எளிதில் யாராலும் மறக்க முடியாது.


தலைசிறந்த வீரர்:


38 வயதான தினேஷ் கார்த்திக் 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1 சதம், 7 அரைசதங்களுடன் 1025 ரன்களும், 94 ஒருநாள் போட்டிகளில் ஆடி 9 அரைசதங்களுடன் 1752 ரன்களும், 60 டி20 போட்டிகளில் ஆடி 1 அரைசதத்துடன் 686 ரன்களும் எடுத்துள்ளார். 2004ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஆடி வரும் தினேஷ் கார்த்திக் 2022 டி20 போட்டியில் கடைசியாக இந்திய அணிக்காக ஆடினார்.


இந்திய அணிக்காகவும், ஐ.பி.எல். தொடரிலும் சுமார் 20 ஆண்டுகளாக ஆடி வரும் தினேஷ் கார்த்திக் இன்னும் ஓரிரு போட்டிகளில் ஆடுவது இன்றைய போட்டியின் முடிவைப் பொறுத்தே அமையும். எதுவாயினும் தமிழ்நாட்டில் இருந்து உதித்த கிரிக்கெட் வீரர்களில் தினேஷ் கார்த்திக் தவிர்க்க முடியாத தலைசிறந்த வீரர் என்பதை அவரது சாதனைகளே வரலாறு பேசும். மேலும், சிறந்த ஃபினிஷர்களின் பட்டியல்களில் தினேஷ் கார்த்திக் பெயரும் என்றும் நிலைத்திருக்கும்.