நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பல சுவாரஸ்யாமான நிகழ்வுகள் போட்டிகளைக் கடந்தும் நடைபெற்றது. குறிப்பாக உலகம் முழுவதும் உள்ள தோனி ரசிகர்கள் தோனி மீதுள்ள அன்பை வெளிப்படுத்தி வந்தனர். இதில் அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, தோனி ரசிகர் ஒருவர் பாதுக்காப்பு வளையத்தைக் கடந்து தோனியைச் சந்தித்தார். தற்போது அந்த ரசிகர் தோனியைச் சந்தித்த பின்னர் அங்கு என்ன நடந்தது என்பதை பகிர்ந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


அந்த வீடியோவில், “நான் மைதானத்திற்குள் ஓடும்போது தோனி என்னைப் பார்க்கமாட்டார் என நினைத்துக் கொண்டு ஓடினேன்.  தோனி என்னை தவிர்த்துவிட்டு போய்விடுவார் என நினைத்தேன். அதேநேரத்தில் தோனியைப் பார்த்ததும் நான் சரண்டர் என்பதைப் போல் சார் எனக் கத்திக் கொண்டே கைகள் இரண்டையும் தூக்கிக்கொண்டு ஓடினேன், என்னைப் பார்த்ததும் தோனி, “ ஜாலியா இரு” எனக் கூறினார். அது இன்னும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதனால்தான் நான் தோனியின் காலில் விழுந்தேன். என்னால் எனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை, அழ ஆரம்பித்துவிட்டேன். அப்போதுதான் தோனி என்னைத் தூக்கி கட்டிப்பிடித்தார். இதனை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. 


அதன் பின்னர் எனது தோள்மீது கை போட்டபடி நடந்துகொண்டே, நான் அப்போது பேசியவற்றை எல்லாம் அமைதியாக தோனி கேட்டுக்கொண்டே இருந்தார்.  எனக்கு அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது. அதற்கு முன்னர் உங்களைப் பார்க்க வரவேண்டும் என நினைத்தேன். அதனால்தான் பாதுகாப்புகளை மீறி வந்தேன் எனக் கூறினேன். “நீ எதுவும் பயப்படாதே, உன்னுடைய அறுவை சிகிச்சையை நான் பார்த்துக் கொள்கின்றேன், பாதுகாவலர்களிடம் நான் பேசிக்கொள்கின்றேன், அவர்கள் உன்னை எதுவும் செய்யமாட்டார்கள்” எனக் கூறினார். இதை அனைத்தையும் நான் ஒரு நிமிடத்தில் பேசிவிட்டேன். ஆனால் நான் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தேன். தோனி கூறிய அந்த வார்த்தைகளுக்காகத்தான் அனைவரும் தல ஃபார் த ரீசன் எனக் கூறுகின்றனர் என்று நினைக்கிறேன். 






பாதுகாவலர்கள் வந்து எனது கழுத்தைப் பிடித்து அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்களைத் தடுத்த தோனி, என்னை மரியாதையுடன் அனுப்பி வைக்கும்படி கூறினார். இன்னொருவர் பின்னால் இருந்து என்னை இழுத்தார். இழுத்தவரின் கையை தோனி தட்டிவிட்டதுடன் மூன்று முறை அழுத்தம் திருத்தமாக என்னை எதுவும் செய்யக்கூடாது எனக் கூறியதுடன் நான் போக பாதுகாவலர்கள் வழிவிடவேண்டும் எனக் கூறினார். அதன் பின்னர்தான் தோனியை நான் இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டேன்” எனக் கூறினார். 


இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.