கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 13 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. முன்னதாக, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி ஏசிஏ-விடிசிஏ சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31 ) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


மீண்டும் பேட் செய்த தோனி:


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்து இருந்தாலும் தோனியின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணியின் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் மோதுவதற்கு முன்னதாக கடந்த இரண்டு போட்டிகளிலும் எம்.எஸ்.தோனி விக்கெட் கீப்பிங் மட்டும் தான் செய்தார். பேட்டிங் செய்யவில்லை. இது ரசிகர்களை ஏமாற்றம் அடையைச் செய்தது. இந்நிலையில் தான் நேற்றைய போட்டியின் மூலம் முதன் முறையாக இந்த  சீசனில் பேட்டிங் செய்தார் தல தோனி. 


கால் வலியுடன் நடந்த தோனி:


அந்தவகையில் டெல்லி அணிக்கு எதிரான அந்த போட்டியில் 16.1 ஓவர்கள் முடிந்த நிலையில் பேட்டிங் செய்ய வந்தார் தோனி. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என்றால் 23 பந்துகளில் 72 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சூழல் இருந்தது. இதனிடையே களம் இறங்கிய தோனி முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார். அடுத்த 16 ஓவரின் இரண்டாவது பந்தை ஓங்கி அடித்தார் கேட்சுக்கு போன அந்த பந்தை டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர் கோட்டை விட்டார்.






பின்னர் வந்த பந்துகளை பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களாக விளாசினார். இதில் தல தோனிக்கே உரித்தான ஒற்றைகையில் சிக்ஸ் ஒன்றை பறக்கவிட்டார். இவ்வாறாக 16 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 37 ரன்களை விளாசினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்து இருந்தாலும் சென்னை அணி ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் இருந்தனர்.  அதேபோல் இந்த போட்டியின் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்தார். முக்கியமாக  டி 20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை  கடந்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற பெருமையும் பெற்றார். 


தோனிக்கு என்னாச்சு?


இந்நிலையில் தான் தோனி தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதாவது போட்டிக்கு பின்னர் தோனிக்கு காலில் தசைபிடிப்பு போன்ற ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இதானால் கால்களில் வலியுடன் தோனி மைதானாத்தில் இருந்து நடந்து வருகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப்பார்த்த ரசிகர்கள் உணர்ச்சி பொங்க கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.