ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர் பட்டாளத்தினைக் கொண்ட அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. 17வது ஆண்டாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் பெங்களூரு அணி கடந்த 16 ஆண்டுகளில் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. ஆனாலும் இந்த அணிக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் இருக்க முக்கிய காரணங்களில் விராட் கோலியும் மிகவும் முக்கியமான காரணம். 


இந்நிலையில் விராட் கோலி, “ஆர்.சி.பி இன்சைடர்” என்ற நிகழ்ச்சியில் RCB நஃக்ஸ்-க்கு பேட்டி கொடுத்தார். அதில் அவரிடம் பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு விராட் கோலியும் சிறப்பாகவே பதில் கூறினார். இதில் சுனில் கவாஸ்கர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 


அந்த வீடியோவின் தொடக்கத்தில் RCB நஃக்ஸ், விராட் கோலி அதிகப்படியான மக்களுக்கு ஒரு கேள்வி உள்ளது, அது என்னவென்றால், “ நீங்கள் என்னைப் போன்ற சராசரி மனிதருடன் நண்பராக பழவீர்களா இல்லை கமெண்டேட்டர்களுடன் நண்பராக பழகுவீர்களா? “ இந்த கேள்விக்கு விராட் கோலி தனது சிரிப்பினை பதிலாகத் தந்தார். 


அடுத்த கேள்வியாக, “விராட் நான் இப்போது உங்கள் நண்பர் குறித்து கேள்வி கேட்கப்போகின்றேன்.  அவர் உங்களைப் பற்றி பல நல்ல விஷயங்களைச் சொல்லியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை சுனில்” என்று கூறிய RCB நஃக்ஸ் சிறிய இடைவெளி விட்டார். அதற்கு விராட் கோலி சுனில் கவாஸ்கர் குறித்துதான் RCB நஃக்ஸ் கேள்வி எழுப்புகின்றார் என்று நினைத்துக் கொண்டு RCB நஃக்ஸ்-ஐப் பார்த்து மிகவும் நக்கலான பார்த்தார்.  அதன் பின்னர் RCB நஃக்ஸ் சுனில் சேத்ரி என்று கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ முழுவதும் விராட் கோலி மிகவும் ஜாலியாக பல சுவாரஸ்யமான பதில்களைக் கொடுத்துள்ளார். இதனை பெங்களூரு  அணி ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். 






விராட் கோலி - சுனில் கவாஸ்கர் வார்த்தைப் போர்


விராட் கோலி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மிகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதில், நீங்கள் டி20 கிரிக்கெட்டில் 15 முதல் 16 ஓவர்கள் வரை பேட்டிங் செய்து உங்களுடைய ஸ்ட்ரைக் ரேட் 100-ஆக உள்ளது என்றால் உங்களால் அணிக்கு என்ன பலன் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக விராட் கோலி, “ நான் களத்தில் இருந்து ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து களநிலவரத்தை அறிந்து விளையாடுகின்றேன். கமெண்ட்ரி பாக்ஸில் அமர்ந்து கொண்டு விமர்சிப்பவர்கள் வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டு இருப்பார்கள். அதனை நான் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை” என பதில் அளித்திருந்தார்.