வழக்கத்திற்கு மாறாக நடப்பு ஐபிஎல் 2024 சீசனில் ரன் மழை பொழிந்து வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த சீசனில் அதிகமுறை 200 ரன்கள் கடந்து புதிய வரலாறு படைத்தது. இந்த ஆண்டு பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடிப்பதில் தயங்குவதில்லை. இந்த சீசனின் 35வது போட்டி வரை, பேட்ஸ்மேன்கள் மொத்தம் 618 சிக்சர்களை அடித்துள்ளனர். மேலும், இந்த சீசனில் ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஸ்கோரை எட்டியது இதுதான். இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடித்த முதல் 5 வீரர்கள் யார் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
அதிக பவுண்டரிகள் அடித்த முதல் 5 வீரர்கள்:
ஐபிஎல் 2024ல் இதுவரை அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் முதலிடத்தில் உள்ளார். இதுவரை இவர் 6 போட்டிகளில் 39 பவுண்டரிகள் உதவியுடன் 324 ரன்கள் குவித்துள்ளார். இதற்குப் பிறகு இரண்டாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி பெயர்தான். கோலி இதுவரை 8 போட்டிகளில் 36 பவுண்டரிகளுடன் 379 ரன்கள் குவித்துள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவின் பெயர் மூன்றாவது இடத்தில் உள்ளது. ரோஹித் சர்மா இதுவரை 8 போட்டிகளில் 31 பவுண்டரிகளுடன் 303 ரன்கள் குவித்துள்ளார். இந்த பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விக்கெட் கீப்பர் பில் சால்ட் நான்காவது இடத்தில் உள்ளார். சால்ட் இதுவரை 7 போட்டிகளில் 31 பவுண்டரிகள் உதவியுடன் 249 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். சஞ்சு இதுவரை 8 போட்டிகளில் 29 பவுண்டரிகளுடன் 314 ரன்கள் குவித்துள்ளார்.
அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் 5 வீரர்கள்:
ஐபிஎல் 2024ல் சிக்ஸர்கள் அடித்ததில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ஹென்ரிச் கிளாசன் முதலிடத்தில் உள்ளார். ஹென்ரிச் 7 போட்டிகளில் 26 சிக்சர்களை அடித்துள்ளார். இதை தொடர்ந்து இந்தப் பட்டியலில் அதே ஹைதராபாத் அணியை சேர்ந்த அபிஷேக் சர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். அபிஷேக் சர்மா இதுவரை 7 போட்டிகளில் 24 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்தப் பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன் பெயர் மூன்றாவது இடத்தில் உள்ளது. நரைன் இதுவரை 7 போட்டிகளில் 20 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்தப் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரியான் பராக் நான்காவது இடத்தில் உள்ளார். ரியான் இதுவரஒ 8 போட்டிகளில் 20 சிக்சர்களை அடித்துள்ளார். டாப் 5 பட்டியலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இவர் இதுவரை 7 போட்டிகளில் 20 சிக்சர்களை அடித்துள்ளார்.
ஒரு அணிக்கு எதிராக அதிக பவுண்டரிகள் அடித்தவர்:
ஐபிஎல் 2024 இல் ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ஃபில் சால்ட். அந்த போட்டியில் பில் சால்ட் 14 பவுண்டரிகள் உட்பட 89 ரன்கள் எடுத்தார்.
ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்:
ஐபிஎல் 2024 இல் ஈடன் கார்டனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ஹென்ரிச் கிளாசன் இதுவரை ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை அடித்துள்ளார். அந்த இன்னிங்ஸில் கிளாசென் 63 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 8 சிக்ஸர்களும் அடங்கும்.