Hardik Pandya: கிரிக்கெட் வீரர்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேச வேண்டும் என, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.


மும்பை அணி தோல்வி:


ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற பர்சளிப்பு விழாவில் தோல்வி குறித்து பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ”வழக்கம்போல் சிரித்துக்கொண்டே அணியில் இருப்பவர்கள் அனைவரும் தொழில்முறை வீரர்கள் என்பதால் வீரர்களை விமர்சிக்க இது சரியான நேரம் அல்ல. அவரவர் கடமை என்ன என்பது அவர்களுக்கு தெரியும். அடிப்படைகளை பின்பற்றி, தோல்விகளை ஒப்புக்கொண்டு அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும்” என தெரிவித்தார்.  


பாண்ட்யா மீது ஸ்டேயின் ஆவேசம்:


இந்நிலையில் தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெயின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நம்மை நாமே ஊமையாக்கிக் கொண்டு, அடுத்த ஆட்டத்தில் தோற்று, சிரித்துவிட்டு, மீண்டும் அந்த முட்டாள்தனத்தை மீண்டும் செய்கிறோம். அதற்குப் பதிலாக வீரர்கள் தங்கள் மனதில் உள்ளதை நேர்மையாகச் சொல்லும் நாளை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அ லவ் யூ குயிண்டன் டி காக்” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம், மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை தான் ஸ்டெயின் இப்படி விமர்சித்து இருப்பதாக ரச்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.






பாண்ட்யா மீது தொடரும் அதிருப்தி:


நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பாண்ட்யா, மும்பை அணி கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்தே அவர் மீது அதிருப்தி நிலவுகிறது. மும்பை அணி ரோகித் பிரிவு, பாண்ட்யா பிரிவு என இரண்டாக உடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு, போட்டியின் போது அவரது நடவடிக்கைகள் மற்றும் போட்டிக்கு பிறகான செய்தியாளர்கள் சந்திப்பும் கூட கடும் விமர்சனங்களுக்கு ஆளாகின்றன. சென்னை அணிக்கு எதிராக ரோகித் சர்மா சதமடித்தது, பெங்களூரு அணிக்கு எதிராக பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தபோது கூட அவர்களை பாராட்டவில்லை. தனது சொந்த அணியின் வீரர்களை காட்டிலும், எதிரணி வீரர்களை பாராட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். என்ன ஆனாலும் தான் ஒரு முதிர்ச்சியடைந்த தலைவன் என்பது போல, சிரித்துக் கொண்டே இருக்கும் பாண்ட்யாவின் செயல்களும் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கின. அவர் போலியாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. அதையே தான் தற்போது, ஸ்டெயினும் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.