ஐ.பி.எல் சீசன் 17:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசனில் இன்று (மே 6) 55 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.


அந்தவகையில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ட்ராவிஷ் ஹெட் மற்றும் அபிஷேக் வர்மா களம் இறங்கினார்கள். பவர்ப்ளே வரை இவர்களது ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இவர்களது ஜோடி பார்டர்ன்ஷிப் அமைத்து 56 ரன்களை விளாசியபோது இந்த ஜோடியை பிரித்தார் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. 16 பந்துகள் களத்தில் நின்ற அபிஷேக் சர்மா 11 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த மயங்க் அகர்வாலும் 5 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். ட்ராவிஷ் ஹெட்டுடன் ஜோடி சேர்ந்தார் நிதிஷ் ரெட்டி. ட்ராவிஷ் ஹெட் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 48 ரன்களில் அவுட் ஆனார்.


174 ரன்கள் இலக்கு:


அடுத்ததாக களம் இறங்கிய கிளாசென் 2 ரன்களில் விக்கெட் ஆக அதனைத்தொடர்ந்து களம் இறங்கிய மார்கோ ஜான்சன் ஓரளவிற்கு ரன்களை சேர்த்தார். அந்தவகையில் 12 பந்துகள் களத்தில் நின்ற அவர் 1 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் என மொத்தம் 17 ரன்களை எடுத்தார். மறுபுறம் ஷாபாஸ் அகமது 10 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்டியா பந்து விக்கெட்டானார். பின்னர் வந்த அப்துல் சமத் 3 ரன்கள் மட்டுமே எடுத்து பியூஸ் சாவ்லா பந்தில் நடையைக்கட்டினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அணியை சரிவில் இருந்து மீட்டார்.  கடைசி வரை களத்தில் நின்ற அவர் 17 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 35 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 174 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்க உள்ளது.