மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வரும் 17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் விளையாட மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொள்ள களமிறங்கியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 




17வது ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டைப் போலவே 10 அணிகள் களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகின்றது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் போட்டிகள் ரசிகர்கள் மனதில் விறுவிறுப்பையும் பரபரப்பையும் அதிகரித்து ஐபிஎல் மீதான ஆர்வத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒன்பதாவது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றது. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை நான்கு லீக் போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. இதில் இரண்டு போட்டிகள் சொந்த மைதானத்திலும் இரண்டு போட்டிகள் வெளி மைதானத்திலும் விளையாடியுள்ளது. தொடர்ந்து மூன்று தோல்விகளைச் சந்தித்த பின்னர் நான்காவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் டெல்லியை வீழ்த்தி தனது புள்ளிக் கணக்கைத் தொடங்கியுள்ளது. 


அதேபோல் பெங்களூரு அணியைப் பொறுத்தவரையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை அணியை எதிர்த்து விளையாடும் வாய்ப்பைப் பெற்றது. ஆனால், சென்னைக்கு எதிரான போட்டி உட்பட இதுவரை ஐந்து லீக் போட்டிகளில் விளையாடியுள்ள, பெங்களூரு அணி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் வெற்றி பெற்று ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. 


மும்பை மற்றும் பெங்களூரு அணி இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 போட்டிகளில் வெற்றியை நிலைநாட்டியுள்ளது. அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைப் பொறுத்தவரையில் 14 போட்டிகளில்  மும்பை அணியை வீழ்த்தியுள்ளது. 


இந்நிலையில் மும்பை அணியை அதன் சொந்த மைதானத்தில் பெங்களூரு அணி எதிர்கொள்ளவுள்ளதால் இன்றைய போட்டி நடப்பு ஐபிஎல் தொடரின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இரு அணி வீரர்களும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்துவார்கள் என்பதால் இன்றைய ஆட்டத்தில் சிக்ஸர் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்): விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரோர், ரீஸ் டாப்லி, விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்


மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்): ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி, ஷ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸி, ஆகாஷ் மத்வால்