நடப்பு ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி. மேலும் ஆட்டம் மும்பையில் நடைபெற்றதால் இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று, தனக்கு ஆறுதலைத் தேடிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. 


டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பூரன் 75 ரன்களும் கேப்டன் கே.எல். ராகுல் 55 ரன்களும் சேர்த்தனர்.  215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நேக்கி மும்பை அணி களமிறங்கியது. 


மும்பை பேட்டிங் தொடங்கி 4வது ஓவரில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின்னர், ஓவர்கள் மற்றும் ஸ்கோர் எதுவும் குறைக்கப்பட்டாமல் ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. மும்பை அண்யின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், பிரேவிஸும் களமிறங்கினர். ரோகித் தனது அதிரடியான ஆட்டத்தினால் 27 பந்துகளில் அரைசதம் விளாசினார். மறுமுனையில் இருந்து பிரேவிஸ் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்திவந்தார். 8 ஓவர்கள் முடியும்போது மும்பை அணி விக்கெட் எதுவும் இழக்காமல், சிறப்பாக விளையாடி வந்தது. 9வது ஓவரில் பிரேவிஸ் தனது விக்கெட்டினை இழக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா 11வது ஓவரில் வெளியேறினார். 


அதன் பின்னர் கைகோர்த்த பாண்டியா மற்றும் இஷான் கிஷன் கூட்டணி தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்த, விக்கெட்டுகளை அள்ளி நெருக்கடியை உருவாக்கிய லக்னோ அணி ஆட்டத்தில் வலுவான நிலையை நோக்கி சென்றது. ஹர்திக் பாண்டியா தனது விக்கெட்டினை இழந்த பின்னர் வந்த நேஹல் வதேரா தனது விக்கெட்டினை ஒரு ரன்னில் இருக்கும்போது இழந்து வெளியேறினார். 


இறுதியாக வந்த நமன் தீர் அதிரடியாக ஆடி அரைசதம் விளாசினாலும் அது தோல்வி வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது. இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி லக்னோ அணிக்கு ஆறுதல் அளித்தாலும், நடப்புத் தொடரில் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பினை ஈட்டும் அளவிற்கு பயன் அளிப்பதாக இல்லை. இதன் காரணமாக லக்னோ அணி ஐந்தாவது அணியாக நடப்புத் தொடரில் இருந்து வெளியேறியது.