ஐ.பி.எல் சீசன் 17:


ஐ.பி.எல். 2024ம் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தங்களது ப்ளே ஆஃப் வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்த நிலையில், நேற்றைய போட்டி நடக்காவிட்டாலும் ஒரு புள்ளியை பெற்ற சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை பெற்றது.


இந்த நிலையில், மும்பையில் இன்று(மே 17) நடைபெறும் முக்கியமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 


கே.எல்.ராகுல் - பூரன் அதிரடி:


முதலில் பேட்டிங்கை தொடங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் தேவ்தட் படிக்கல் களம் இறங்கினார்கள். இதில் தேவ்தட் படிக்கல் டக் அவுட் ஆகி நடையைக்கட்டினார்.


ஆனால் மறுபுறம் நிதானமான தொடக்கத்தை அமைத்து கொடுத்த அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல். அப்போது அவருடன் மார்கஸ் ஸ்டோனிஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்துக்கொண்டிருக்க மார்கஸ் ஸ்டோனிஸ் விக்கெட்டை பறிகொடுத்தார்.


மொத்தம் 22 பந்துகள் களத்தில் நின்ற அவர் 5 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 28 ரன்கள் எடுத்தார். அடுத்த வந்த தீபக் ஹூடா 11 ரன்களில் நடையைக்கட்ட ராகுலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார் நிக்கோலஸ் பூரம். 


சிக்ஸர் மழை:


தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடினாலும் மறுபுறம் மும்பை அணியின் பந்துகளை வானவேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார் நிக்கோலஸ் பூரன். அதிரடி ஆட்டத்தால் மும்பை அணியை மிரட்டிய அவர் 69 ரன்களை மட்டுமே லக்னோ அணி எடுத்த போது களம் இறங்கி 178 ரன்களை எடுக்கும் வரையில் களத்தில் நின்றார்.


அந்தவகையில் 29 பந்துகளில் 5 பவுண்டரி 8 சிக்ஸர்களை பறக்கவிட்டு மொத்தம் 75 ரன்களை குவித்தார். இதனிடையே தன்னுடைய அரைசதத்தை பதிவு செய்தார் கே.எல்.ராகுல். மொத்தம் 41 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 55 ரன்கள் எடுத்தார். 


கடைசியில் கலக்கிய ஆயூஷ் படோனி:


பின்னர் வந்த ஆயூஷ் படோனி கடைசி இரண்டு ஓவர்களில் களம் இறங்கினார். லக்னோ அணி 200 ரன்களை கடக்குமா என்ற சூழலில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொத்தம் 10 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற அவர் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 22 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.


அதேபோல் க்ருணால் பாண்டியாவும் ஆட்டமிழக்காமல் 7 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 12 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 214 ரன்களை குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியுள்ளது.