ஐபிஎல் தொடரில் நேற்று அதாவது மார்ச் 24ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி சில ஓவர்களில் குஜராத் அணி போட்டியை தன் கட்டுக்குள் கொண்டுவந்தது மட்டும் இல்லாமல் கடைசி ஓவரில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை அணி தோல்வியைத் தழுவியது மட்டும் இல்லாமல், தொடர்ந்து 12 ஆண்டுகளாக அதாவது கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் தோல்வியைத் தழுவி வருகின்றது. 


கடைசி ஓவரை வீசிய உமேஷ் யாதவ்


இந்நிலையில், குஜராத் அணி சார்பில் கடைசி ஓவரை வீசிய உமேஷ் யாதவ் போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக சுப்மன் கில்லின் கேப்டன்சி குறித்து பேசியது ஐபிஎல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. யுமேஷ் யாதவ் பேசுகையில், “ போட்டியின்போது நான் அமைதியாக பீல்டிங் செய்து கொண்டு இருந்தேன். அப்போது நெக்ரா என்னிடம் வந்து என்னை கடைசி ஓவரை வீசச் சொன்னார்.  மும்பை அணிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. அதன்படி கடைசி ஓவரை வீசிய நான் முதல் இரண்டு பந்துகளில் 10 ரன்கள் கொடுத்துவிட்டேன். ஆனால் அப்போது கேப்டன் சுப்மன் கில் என்னிடம் வந்து உங்களால் முடியும் என என்னை ஊக்கப்படுத்தினார். முதல் இரண்டு பந்துகளில் பந்தை ஸ்டெம்புக்குகளுக்கு வெளியே வீசினேன். ஆனால் இந்த மைதானத்தில் ஸ்டெம்புகளுக்கு பந்தை வீசுவதுதான் சரியானதாக இருக்கும் என உணர்ந்த நான் அதன் பின்னர் பந்தை ஸ்டெம்புகளுக்கு குறிவைத்து வீசினேன். 


சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இதுதான் காரணம்


ஒரு அணியில் கேப்டன் மட்டும் இல்லாமல் அணியில் இருக்கும் சக வீரர்கள், ஊழியர்கள் என அனைவரும் நம் மீது நம்பிக்கை வைத்திருக்கும்போது நம்மால் எப்போதும் சிறப்பான விளையாட்டினை வெளிப்படுத்த முடியும். கேப்டன் கில்லுக்கு நேற்றை போட்டி முதல் போட்டியாக இருந்தாலும் அவரது கேப்டன்சியில் முதிர்ச்சியும், புத்திசாலித்தனும் நிறைந்து காணப்படுகின்றது. ஒரு கேப்டனாக கில் அணியில் இருக்கும் அனைவரிடமும் பேசி பவுலர்களைப் பயன்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. இந்த வியூகத்தினை அவர் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்தால் அவரால் சிறந்த கேப்டனாக உருவெடுக்க முடியும்” என யுமேஷ் யாதவ் தெரிவித்தார். 


நேற்று சுப்மன் கில்லுக்கு ஐபிஎல் தொடரில் கேப்டனாக முதல் போட்டி என்பதால் அவர் மீது இந்திய கிரிக்கெட் வட்டாரமே அவர்மீது கண்களை வைத்திருந்தது என்றே கூறவேண்டும். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக பார்க்கப்படும் சுப்மன் கில் சிறப்பாக கேப்டன்சி செய்து தனது கேப்டன் அத்தியாயத்தை வெற்றியோடு தொடங்கியுள்ளார்.