ஐபிஎல் 2024ல் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கியது. ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமித்த பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குவது இதுவே முதல்முறை என்பதால் இந்த போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
போட்டியின்போது ஹர்திக் பாண்டியா தலைமையின்கீழ் ரோஹித் சர்மா எப்படி செயல்படுவார், மும்பை அணியின் ரசிகர்கள் அவரை முழுமையாக ஏற்றுகொள்வார்களா என்பதெல்லாம் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்தநிலையில், இந்த போட்டிக்கு நடுவில் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் சிலர் மோசமாக நடத்தினர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
என்ன நடந்தது..?
நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. அப்போது போட்டிக்கு நடுவே, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு நாய் ஒன்று மைதானத்திற்குள் ஓடியது. அந்த நேரத்தில் அகமதாபாத் மைதானத்தில் அமர்ந்திருந்த கிரிக்கெட் ரசிகர்கள் அந்த நாயை பார்த்து ‘ஹர்திக்-ஹர்திக்’ என்று கூச்சலிட்டனர்.
வைரலான இந்த வீடியோவில், மைதானத்தில் நாய் ஓடுவதை பார்த்த ரசிகர்கள் ஹர்திக் - ஹர்திக் என்று கோஷங்களை எழுப்புவதை காணலாம்.
ரசிகர்கள் ஏன் இப்படி செய்தனர்..?
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. குஜராத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். அதனால்தான் தங்களுடைய கோபத்தை இப்படி வெளிப்படுத்தினர்.
அதனை தொடர்ந்து, போட்டியின் 15வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசியபோது, நாய் ஒன்று மைதானத்திற்குள் ஓடியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் நாயை செல்லமாக அழைக்க முயன்றார். இதை கண்டுகொள்ளாமல் நாய் ஓட்டம் பிடித்தது. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போட்டி சுருக்கம்:
முதலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.
குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்திருந்தார். மும்பை அணி சார்பில் பும்ரா 4 ஓவர்கள் வீசி வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் டக் அவுட்டாகி முதல் ஓவரிலேயே அதிர்ச்சி அளித்தார். இதன்பிறகு ரோஹித் சர்மா 43, நமன் தீர் 20, டெவால்ட் ப்ரீவிஸ் 46 ரன்களுடன் வெளியேற குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.