கிரிக்கெட் உலகில் நடத்தப்படும் லீக் போட்டிகளில் அதிக ரசிகர்களால் பார்க்கப்படும் லீக் போட்டி, அதிக வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கும் லீக் போட்டி, அதிக பணம் புழங்கும் லீக் போட்டி என்ற பெருமையைக் கொண்ட லீக் போட்டி என்றால் அது இந்தியாவில் நடத்தப்படும் இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டிதான். இந்த லீக் போட்டியில் முக்கியமான அணி என்றால் அதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எப்போதுமே முதல் இடம்தான்.


அந்த அணி நிர்வாகம் கடந்த 10 ஆண்டுகளாக கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை அணியில் ஒரு வீரராக தக்கவைத்து, கேப்டன்சியை ஹர்திக் பாண்டியாவிடம் வழங்கியது. இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தொடங்கி பல முன்னாள் மும்பை அணி வீரர்களுக்கும் சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் மற்றும் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை இயக்குநராக உள்ள கங்குலி தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.


கைமாற்றப்பட்ட கேப்டன்ஷி


கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டு ஐபிஎல் தொடர்களில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு இரண்டு முறையும் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று, அதில் அறிமுக சீசனில் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தவர் ஹர்திக் பாண்டியா. இவரை கடந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்திற்குப் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி ட்ரேட் செய்தது. இதையடுத்து ரோகித் சர்மா வசம் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்ஷியை ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்தது மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம். 


இது பல லட்சக்கணக்கான மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் ரசிகர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர். குறிப்பாக பல லட்சக்கணக்கான ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதளப்பக்கத்தினை பின்தொடர்வதில் இருந்து வெளியேறினர். அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கொடிகளை எரித்தும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். 


ஆதங்கத்தை வெளிப்படுத்திய கங்குலி 


இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று லீக் போட்டிகளில் விளையாடியுள்ளது.  போட்டிகளை நேரில் காண வந்த ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷமிட்டனர். இந்த மூன்று போட்டிகளிலும் மும்பை அணி தோல்வியைத் தழுவியது. இது வெளிநாட்டு வீரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக சவுரவ் கங்குலி தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதில், மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளது என்பது அந்த அணி நிர்வாகத்தின் முடிவு. அதனை நாம் மதிக்க வேண்டும். ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அது தவறு” எனக் கூறியுள்ளார்.