ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைச் சந்தித்த பின்னர் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் விராட் கோலியின் பேட்டிங் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
17வது ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி சதம் விளாசினார். விராட் கோலி 72 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரியும் 4 சிக்ஸர் உட்பட 113 ரன்கள் குவித்திருந்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை எடுத்து வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி 58 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்ஸர் உட்பட 100 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
விராட் மீது குவிந்த விமர்சனங்கள்
இந்த போட்டியில் விராட் கோலி சதம் விளாசியது தொடர்பாக இணையத்தில் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, விராட் கோலி தனது சதத்தினை எட்ட 67 பந்துகளை எடுத்துக்கொண்டார். இது ஐபிஎல் தொடரில் மிகவும் அதிக பந்துகளில் விளாசப்பட்ட சதமாக பதிவாகியுள்ளது. ஏற்கனவே இதேபோல் 2009ஆம் ஆண்டு மனீஷ் பாண்டே 67 பந்துகளில் சதத்தினை எட்டியதுதான் ஐபிஎல் வரலாற்றில் அதிக பந்துகளில் அடிக்கப்பட்ட சதமாக இருந்தது. இதனை விராட் கோலி சமன் செய்துள்ளார். இதனால் விராட் கோலி சதம் விளாசுவதை நோக்கமாகக் கொண்டு, கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடாமல் ஒரு ஒரு ரன்களாகவே விளையாடினார். இதனைக் காரணம் காட்டியே விராட் கோலியை விமர்சனம் செய்து வருகின்றனர்.
டூ பிளெசிஸ் கருத்து
போட்டி முடிந்த பின்னர் தோல்விக்கான காரணம் குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளெசிஸ், “ கடைசி ஓவர்களில் விராட் கோலி மற்றும் கேமரூன் க்ரீன் அதிக ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் ஆடுகளம் மிகவுமே சவாலானதாக இருந்தது. அதைச் சமாளித்து இருவரும் விளையாடினர்” எனத் தெரிவித்தார்.
முதல் இன்னிங்ஸ் முடிந்த பின்னர் பேசிய விராட் கோலி, “ஆடுகளம் பார்ப்பதற்கு பேட்டிங்கிற்கு சாதகமானதாகத் தெரியலாம். ஆனால் பேட்டிங்கிற்கு மிகவும் சவாலானதாக இருந்தது. இத்தனை ஆண்டுகால அனுபவத்தினால் இந்த சதத்தை நான் எட்டியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், விராட் மற்றும் டூ ப்ளெசிஸ் கருத்தை ரசிகர்கள் பலரும் விராட்டுக்கு ஆதரவாகவும் பகிர்ந்து வருகின்றனர்.