நடப்பு ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 206 ரன்கள் சேர்த்தது. 


டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய சென்னை அணியின் இன்னிங்ஸை ரச்சின் ரவீந்திராவும் ரஹானேவும் தொடங்கினர். மும்பை அணி சார்பில் முகமது நபி முதல் ஓவரை வீசினார். சென்னை அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. போட்டியின் இரண்டாவது ஓவரில் கோட்ஸீ பந்தில் ரஹானே தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் களத்திற்கு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் வந்தார். களத்திற்கு வந்ததில் இருந்து அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தார். 


குறிப்பாக பவுண்டரிகளும் சிக்ஸர்களும் விளாசிவந்தார். பவர்ப்ளேவில் அதிகப்படியான பந்துகளை ருதுராஜ் எதிர்கொண்டு சிக்ஸர்கள் விளாசினார். இதனால் பவர்ப்ளே முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 49 ரன்கள் சேர்த்திருந்தது. பவர்ப்ளேவிற்குப் பின்னர் அதிரடியாக விளையாட முயற்சி செய்த ரச்சின் ரவீந்திரா, ஸ்ரேயாஸ் கோபால் வீசிய போட்டியின் 8வது ஓவரில் மிரட்டலான சிக்ஸரை விளாசினார். ஆனால் அடுத்தப்பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 


அதன் பின்னர் களத்திற்கு வந்த சென்னை அணியின் சிக்ஸர் மன்னன் ஷிவம் துபே கேப்டன் ருதுராஜுடன் இணைந்து விளையாடினார். இவர்கள் கூட்டணியை உடைக்க மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா போட்டியின் 10வது ஓவரை வீசினார். ஆனால் அந்த ஓவரை எதிர்கொண்ட ஷிவம் துபே அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகள் விளாசினார். 


இவர்கள் கூட்டணி சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. ருதுராஜ் கெய்க்வாடும் ஷிபம் டுபேவும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தினை எட்டினர். அணியின் ஸ்கோரும் சீராக உயர்ந்தது. ஹர்திக் பாண்டியா வீசிய போட்டியின் 16வது ஓவரில் ருதுராஜ் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த மிட்ஷெல் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரால் பந்தை பவுண்டரிக்கு விரட்ட முடியவில்லை. இதனால் சென்னை அணியின் ஸ்கோர் ரசிகர்கள் எதிர்பார்த்ததைப் போல், உயரவில்லை. ஆட்டத்தின் கடைசி ஓவரில் மிட்ஷெல் தனது விக்கெட்டினை இழக்க, அதன் பின்னர் தோனி களமிறங்கினார். தோனி சந்தித்த நான்கு பந்துகளில் முதல் மூன்று பந்துகளை சிக்ஸருக்கு விளாசி அசத்தியது, அணியை 200 ரன்களைக் கடக்க உதவியது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 206 ரன்கள் சேர்த்தது.