17வது ஐபிஎல்  தொடரின் 28வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் சேர்த்தது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் இன்னிங்ஸை டி காக் மற்றும் கே.எல். ராகுல் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி லக்னோ அணிக்கு அட்டகாசமான தொடக்கத்தினை ஏற்படுத்தினார் டி காக். ஆனால் இரண்டாவது ஒவரில் டி காக் தனது விக்கெட்டினை வெளியேற, லக்னோ அணி நிதான ஆட்டத்தில் கவனம் செலுத்தியது. 


மூன்றாவது வீரராக களமிறங்கிய ஹூடாவும் சொதப்ப லக்னோ அணி நெருக்கடிக்கு உள்ளானது. கேப்டன் ராகுலுடன் இணைந்த பதோனி விக்கெட்டினை இழக்காமல் பொறுப்பாக விளையாடி வந்தார். ஆட்டத்தின் 11வது ஓவரில் கே.எல். ராகுல் சிக்ஸர் விளாச முயற்சி செய்து தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த ஸ்டாய்ன்ஸ் அதிரடியாக இரண்டு பவுண்டரிகளை விளாசினாலும், வருண் சக்ரவர்த்தி பந்தில் விக்கெட் கீப்பர் பிலிப் சால்ட் பிடித்த அட்டகாசமான கேட்சினால் வெளியேறினார். 


அதன் பின்னர் பூரன் களமிறங்கி சிறிது நேரத்தில் பதோனி வெளியேறிய பின்னர், பூரனுடன் க்ருனால் பாண்டியா கைகோர்த்தார். இருவரும் இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பதால் கொல்கத்தா அணிக்கு பந்து வீசுவதில் சிரமம் இல்லாமல் இருந்தது. இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் சேர்த்தது. 


அதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி முதல் ஓவரில் இருந்தே இலக்கை வேகமாக துரத்த ஆரம்பித்தது. குறிப்பாக  தொடக்க வீரர் பிலிப் சால்ட் அசால்ட்டாக பவுண்டரிகளை விளாசி லக்னோவுக்கு தொந்தரவாக இருந்தார். மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரேன் அதையடுத்து வந்த ரகுவன்ஷி சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினாலும், அதன் பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடினார். இவர்கள் கூட்டணியை பிரிக்க லக்னோ அணி பவுலர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் எடுபடவில்லை. கிடைத்த ரன் அவுட் வாய்ப்புகளையும் வீணடித்தனர். இதனால் கொல்கத்தா அணி 15.4 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 162 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை களத்தில் இருந்த பிலிப் சால்ட் 47 பந்தில் 89 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 38 பந்தில் 38 ரன்களும் சேர்த்திருந்தனர்.