ஐபிஎல் 2024ல் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். 


இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 69 ரன்களும், ஷிவம் துபே 66 ரன்களும் எடுத்தனர். இது தவிர, எம்.எஸ்.தோனி கடைசி ஓவரில் களமிறங்கி வெறும் 4 பந்துகளில் 20 ரன்களை எடுத்து அசத்தினார். 


2000 ரன்களை கடந்த ருதுராஜ்: 


எப்போதும் சென்னை அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கும் ருதுராஜ் கெய்க்வாட், நேற்றைய போட்டியில் ஒரு விக்கெட் சரிந்தபிறகு களமிறங்கி அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இந்த இன்னிங்ஸின் போது, ருதுராஜ் ஐபிஎல்லில் தனது 2000 ரன்களை கடந்தார். இதன்மூலம் ருதுராஜ் கெய்க்வாட் தாந்து பெயரில் பெரிய சாதனை ஒன்றை படைத்தார். 


மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ருதுராஜ் கெய்க்வாட் 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 172.50 ஸ்ட்ரைக் ரேட்டில் 69 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான தனது முந்தைய ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், இந்த சீசனில் கெய்க்வாட் அடித்த இரண்டாவது தொடர்ச்சியான அரைசதத்தை பதிவு செய்தார். 


இந்த ஆட்டத்தில் கெய்க்வாட் தனது 48வது ரன்னை தொட்டபோது, ஐபிஎல்லில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையையும், ஒட்டுமொத்தமாக 3வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 


ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு முன் கிறிஸ் கெய்ல் மற்றும் ஷான் மார்ஷ் முன்னிலையில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கெய்ல் 48 இன்னிங்ஸ்களிலும், ஷான் மார்ஷ் 52 இன்னிங்ஸ்களிலும் இந்த சாதனையை படைத்தனர். கெய்க்வாட் 57 இன்னிங்ஸ்களிலும், கே.எல். ராகுல் 60 இன்னிங்ஸ்களிலும் 2000 ரன்களை கடந்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 






அதிவேகமாக 2000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியல்: 



  1. ருதுராஜ் கெய்க்வாட் - 57 இன்னிங்ஸ்

  2. கேஎல் ராகுல் - 60 இன்னிங்ஸ்

  3. சச்சின் டெண்டுல்கர் - 63 இன்னிங்ஸ்

  4. ரிஷப் பந்த் - 64 இன்னிங்ஸ்

  5. கவுதம் கம்பீர் - 68 இன்னிங்ஸ்


சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியல்: 


சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலிலும் 6வது இடத்திற்கு முன்னேறினார் ருதுராஜ் கெய்க்வாட். சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் ’சின்ன தல’ ரெய்னா 5,529 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 5,016 ரன்களுடன் தோனி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஃபாஃப் டு பிளெசிஸ் (2,932), மைக்கேல் ஹஸ்ஸி (2,213), முரளி விஜய் (2,205) ஆகியோர் அடுத்த இடத்தில் உள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். 


கெய்க்வாட் ஐபிஎல் 2021 சீசனில் 635 ரன்கள் எடுத்ததற்காக ஆரஞ்சு கேப்பை வென்றார். கடந்த 2023 ஆம் ஆண்டு அவர் 500 ரன்களுக்கு மேல் (590) குவித்திருந்தார்.