CSK Vs DC, IPL 2024: சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 11 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், வார இறுதியான இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, இரண்டாவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.
சென்னை - டெல்லி மோதல்:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சென்னை அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வென்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அதேநேரம், டெல்லி அணியோ விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இதனால் ஹாட்ரிக் வெற்றி பெற சென்னை அணியும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க டெல்லி அணியும் முனைப்பு காட்டுகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
போட்டி பொதுவான விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னை அணியை பொருத்தவரையில் பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பந்துவீச்சில் ஒரு சில வீரர்கள் ரன்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயம். புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சிறப்பான செயல்பாட்டால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். மறுபுறம் டெல்லி அணியோ பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. விபத்தில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட்டும், அணிக்கு சரியான பங்களிப்பை வழங்க முடியாமல் தடுமாறி வருகிறார். இன்றைய போட்டியில் வெற்றி பெற அணியில் உள்ள பல பிரச்னைகளை டெல்லி அணி நிவர்த்தி செய்ய வேண்டியது குறிப்பிடத்தக்கது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 29 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 19 முறையும், டெல்லி அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. டெல்லி அணிக்கு எதிராக ஒரு போட்டியில் சென்னை அணி அதிகபட்சமாக 223 ரன்களையும், குறைந்தபட்சமாக 110 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், சென்னை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் டெல்லி அணி அதிகபட்சமாக 198 ரன்களையும், குறைந்தபட்சமாக 83 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
மைதானம் எப்படி?
ஒய்.எஸ்.ராஜசேர் ரெட்டி மைதானம் சிறந்த டி20 கிரிக்கெட் டிராக்கை கொண்டுள்ளது. பேட்ஸ்மேன்கள் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்த மைதானம் உதவும். வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த மைதானத்தில் சிரமப்பட வேண்டியது இருக்கும். அதேநேரம் சுழற்பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும்.
உத்தேச அணி விவரங்கள்:
சென்னை: ருதுராஜ் கெய்க்வாட் , ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான்
டெல்லி: ரிஷப் பண்ட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிக்கி புய், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்