ஐபிஎல் தொடரின் 17வது சீசனின் 11வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
200 ரன்கள் இலக்கு
வாஜ்பாய் ஏக்னா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்தது. லக்னோ அணியின் கேப்டனாக இந்த போட்டியில் நிக்கோலஸ் பூரான் செயல்பட்டார். அதேபோல் லக்னோ அணி சார்பில் தமிழ்நாட்டினை சேர்ந்த மணிமாறன் சித்தார்த் ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. லக்னோ அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர் டி காக் 54 ரன்களும், கேப்டன் பூரான் 42 ரன்களும், இறுதியில் அதிரடியாக ஆடிய க்ருனால் பாண்டியா 43 ரன்களும் குவித்திருந்தனர்.
அட்டகாசமான தொடக்கம்
அதன் பின்னர் 200 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியின் இன்னிங்ஸை வழக்கம்போல் கேப்டன் ஷிகர் தவானும், ஜானி பேரிஸ்டோவும் தொடங்கினர். இவர்கள் இருவரும் பஞ்சாப் அணிக்கு ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தருவார்கள் என அனைவரும் எதிர்பார்க்கும்போது, இருவரும் 10 ஓவர்கள் வரை விக்கெட்டினை இழக்காமல் 98 ரன்கள் குவித்தனர். போட்டியின் 12வது ஓவரின் நான்காவது பந்தில் ஜானி பேரிஸ்டோவ் தனது விக்கெட்டினை 29 பந்தில் 42 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்தார். அடுத்து வந்த ப்ரப்சிம்ரன் தனது விக்கெட்டினை 19 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்தார். இவர்கள் இருவரின் விக்கெட்டினையும் மயங்க் யாதவ் கைப்பற்றினார்.
லக்னோ வசம் வந்த ஆட்டம்
அதன் பின்னர் வந்த ஜிதேஷ் சர்மாவும் மயங்க் யாதவின் வேகத்தில் தனது விக்கெட்டினை இழக்க, போட்டியில் சுவாரஸ்யம் கூடியது. பஞ்சாப் அணிக்கு 26 பந்தில் 61 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலைக்கு லக்னோ அணியால் தள்ளப்பட்டது. இதையடுத்து மோசின் கான் வீசிய போட்டியின் 17வது ஓவரில் பொறுப்பாக விளையாடி 70 ரன்கள் குவித்த ஷிகர் தவானையும், அடுத்த பந்தில் சாம் கரனையும் ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் போட்டியில் லக்னோவின் கரங்கள் உயர்ந்தது.
கடைசி இரண்டு ஓவர்களில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 48 ரன்கள் தேவைப்பட்டது. அதாவது ஓவருக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் லிவிங்ஸ்டனும் ஷஷாங்க் சிங்கும் இருந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தனது வெற்றிப் பயணத்தை தொடங்கியுள்ளது.