சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துவதாக தகவல் வெளியானதையடுத்து, என்ஜிடி(தேசிய பசுமை தீர்ப்பாயம்) இந்த விஷயத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.


கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நகரில் 3,000க்கும் மேற்பட்ட ஆழ்த்துளை கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்படுவதால் மக்கள் தண்ணீர் லாரியை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோடைகாலம் தொடங்கும் முன்பே பெங்களூருவில் தண்ணீர் பிரச்னை தொடங்கிவிட்டது. ஒரு கோடியே 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில், மக்களின் அன்றாட தண்ணீர் தேவையில் 1,500 மில்லியன் லிட்டர் பற்றாக்குறை உள்ளது. இச்சூழலில் தண்ணீர் சேமிப்பு குறித்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, மத்திய அரசின் வறட்சி நிவாரணம் கோரி கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது.


பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு:


இந்நிலையில் தான் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் பராமரிப்பு வேலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது. இச்சூழலில்  நகரில் அதிகரித்து வரும் தண்ணீர் நெருக்கடிக்கு மத்தியில், ஐபிஎல் போட்டிகளின் போது சின்னசாமி ஸ்டேடியத்தில் தண்ணீர் உபயோகம் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறும், சுத்திகரிக்கப்பட்ட நீர் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும்  கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் இது தொடர்புடைய மாநில அதிகாரிகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) கேள்வி எழுப்பியுள்ளது.


பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) மற்றும் கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (KSPCB) ஸ்டேடியத்தில் பயன்படுத்தப்படும் நீரின் அளவு மற்றும் ஆதாரம் குறித்த தகவல்களை மே 2 ஆம் தேதிக்குள் வெளியிடுமாறு NGT கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாய  தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் உறுப்பினர் டாக்டர் ஏ. செந்தில் வேல் ஆகியோர் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, .பி.எல் 17 வது சீசனில் இதுவரை 3 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த போட்டிகளுக்காக சுமார் 75,000 லிட்டர் தண்ணீர் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 15, மே 4, மே 12 மற்றும் மே 18 ஆகிய தேதிகளில் நான்கு போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.


கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மறுப்பு:


கார்நாடக மாநில கிரிக்கெட் சங்க அதிகாரிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை ஐ.பி.எல் போட்டிகளின் போது பயன்படுத்தவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். பிட்ச் அல்லது அவுட்ஃபீல்ட் பராமரிப்பு போன்ற பணிகளுக்கு நிலத்தடி நீர் அல்லது குடிநீரைப் பயன்படுத்தவில்லை என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.  இதற்கிடையில், தோட்டக்கலை மற்றும் வாகனம் கழுவுதல் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு குடிநீரைப் பயன்படுத்துவதற்கு கர்நாடக அரசு கடுமையான தடையை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.