எப்படி ஒரு திருவிழாவிற்காக ஒரு ஊரே ஒரு வருடமாக காத்திருக்குமோ! அதுபோல், தோனியை காண ஐபிஎல் சீசனுக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒரு வருடமாக காத்திருக்கின்றனர். தோனி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவரது சிறு அசைவு கூட இங்கு சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சுட்டிக்குழந்தை முதல் ஐபிஎல்லில் இடம்பிடித்த இளம் வீரர்கள் வரை தோனியை காண தவம் கிடக்கின்றன. எம்.எஸ்.தோனிக்கு எதிராகவோ அல்லது அவரது அணியிலோ இடம் பிடித்த இளம் வீரர்கள் பலர் அவருடன் புகைப்படம் எடுத்துகொள்வதும், தங்களது ஜெர்சி மற்றும் பேட்களில் ஆட்டோகிராப் வாங்குவதும் என அன்பை பொழிய செய்கின்றன.
அந்தவகையில், கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் இலங்கை வீரர் பதிரானா. கடந்த சீசனில் இவர்கள் இருவருக்கும் இடையேயான பந்தம் சோசியல் மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டது. இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு, பதிரானா காயம் காரணமாக முதல் பாதியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியது. இதனை கேட்ட, சென்னை ரசிகர்கள் இந்த பந்தத்தை மிகவும் மிஸ் செய்கிறோம் என வாய்விட்டே சொல்லி கொண்டு இருந்தனர். கிடைத்த தகவலின்படி, பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் பதிரானா விளையாடவில்லை. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன்பாக சென்னை வந்தடைந்தார் பதிரானா. எதிர்பார்த்தப்படி, அன்றைய போட்டியிலும் பதிரானா நேரடியாக களம் இறக்கப்பட்டார்.
போட்டிக்கு தொடங்குவதற்கு முன், மைதானத்தின் நடுவே வழக்கம்போல் தோனியை சுற்றி வீரர்கள் மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. அப்போது, அனைத்து வீரர்களும் பீல்டிங் நோக்கி தங்கள் இடத்திற்கு செல்ல, பதிரானா மட்டும் அனைவரும் போனபின்பும் தோனிக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பதிரானா குனிந்து தோனியின் கால்களை நோக்கி வணங்கினார். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் டாப் டிரெண்டிங்காக உள்ளது. மேலும், பலரும் இந்த வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு தந்தை - மகனுக்கு இடையேயான உறவு போன்றது தோனி - பதிரானா உறவு என்று கொண்டாடி வருகின்றனர்.
ஒரு ஓவர் போடுறீங்களா தல..?
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவி தற்போது ருதுராஜ் கெய்க்வாட்டிடம் சென்றாலும், ருதுராஜ் அவ்வபோது சிறு சிறு விஷயங்களை தோனியிடம் ஆலோசனை செய்வார். கடந்த சில ஐபிஎல் சீசன்களுக்கு முன், தோனி சென்னை அணிக்காக ஓரிரு முறை பந்துவீசி பார்த்திருக்கிறோம். அந்த வகையில், ருதுராஜ் கெய்க்வாட் தோனியிடம் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சைகை மூலம் ‘நீங்க ஒரு ஓவர் வீசுறீங்களா..?’ என்று கேட்டார். அதற்கு தோனி எந்தவொரு பதிலையும் கூறாமல் சிரித்துகொண்டே இருந்தார். இந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.