ஐபிஎல் 2024ன் 5வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது அனைவரின் பார்வையும் ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா மீதுதான் இருந்தது. 


கடந்த ஆண்டு டிசம்பர் மாத ஏலத்திற்கு பிறகு ரோஹித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவியை பறித்த மும்பை அணி, ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்தது. போட்டியின்போது இந்த இரண்டு வீரர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி எப்படி இருந்தது என்பதை ரசிகர்கள் பார்க்க விரும்பினர். போட்டியின்போது பல முறை, ரோஹித் சர்மா ஹர்திக்கிற்கு ஆலோசனைகளை வழங்குவதை காண முடிந்தது. அதே நேரத்தில் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங் அமைப்புகளை மாற்றும்போது ரோஹித் எல்லைக்கோட்டு அனுப்பினார். வழக்கமாக ரோஹித் சர்மா 30 யார்டு வட்டத்திற்குள் நின்று பீல்டு செய்வார், ஆனால் ஹர்திக் பாண்டியா அவரை எல்லைக்கு அனுப்பினார். ஹர்திக் பாண்டியா தன்னை எல்லைக்கு அனுப்புவதை ரோஹித் சர்மாவால் நம்ப முடியவில்லை. 


நேற்று போட்டிக்கு பிறகு, சமூக வலைதளங்களில் ஹர்திக் பாண்டியாவின் பல வீடியோக்கள் வைரலானது. அத்தகைய ஒரு வீடியோவில், ரோஹித் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா மீது கோபமாக காணப்பட்டனர். மேலும், அவர்கள் இந்த கோபத்தை மறைக்க கூட முயற்சிக்கவில்லை. 


என்ன நடந்தது..? 


ஓவர்களுக்கு இடையில், பும்ரா ஹர்திக்குடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தர். அப்போது, இந்த விவாதத்தின்போது ரோஹித்தும் கலந்து கொண்டார். ரோஹித் வந்தவுடன், ஹர்திக் பாண்டியா ஏதோ சொல்லி கொண்டே திரும்பி செல்ல தொடங்கினார். ரோஹித்தின் சைகைகளை தொடர்ந்து பும்ரா, அவரிடம் ஏதோ புகார் அளித்தார். கிளம்பும்போது ரோஹித், ஹர்திக்கை நோக்கி விரலை காட்டி ஏதோ சொல்கிறார். அதற்கு ஹர்திக்கும் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. 






இந்த விவாதம் ஸ்டம்ப் மைக்கை விட்டு தள்ளி நடந்த்தால் அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் மூன்று சீனியர்களும் ஏதோ ஒரு பிரச்சினையில் இருந்தது மட்டும் தெரிந்தது.  இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலானது. 


போட்டி சுருக்கம்: 


டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்களும், சுப்மன் கில் 31 ரன்கள் எடுத்திருந்தனர். 


மும்பை அணியின் அதிகபட்சமாக பும்ரா 4 ஓவர்கள் வீசி வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். 


168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் கணக்கு திறக்காமல் முதல் ஓவரிலேயே பெவிலியன் திரும்பினார். இதன்பிறகு ரோஹித் சர்மா 43, நமன் தீர் 20, டெவால்ட் ப்ரீவிஸ் 46 ரன்கள் எடுத்தனர். 16வது ஓவரில் ப்ரீவிஸ் அவுட் ஆனபோது, மும்பை அணியின் வெற்றிக்கு 25 பந்துகளில் 40 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக பந்துவீசிய குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.