ஐபிஎல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 11 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இந்நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சான் ரைடர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இதனிடையே இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாட உள்ளன. அந்தவகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.
களமிறங்குவாரா தோனி?
பின்னர், குஜராத் டைட்டன்ஸ் அணியையும் வீழ்த்தியது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சி.எஸ்.கே அணி. ஆனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் தான் ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இன்றைய போட்டியில் சென்னை அணி களம் கண உள்ளது. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் எம்.எஸ்.தோனி விக்கெட் கீப்பிங் செய்தாலும் பேட்டிங்கில் களம் இறங்கவில்லை. இச்சூழலில் தான் இன்றைய போட்டியிலாவது தோனி பேட்டிங் செய்வாரா? என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில் தான் எம்.எஸ்.தோனியின் ஐ.பி.எல் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார். இது தொடர்பகா அவர் பேசுகையில், “இது எம்.எஸ். தோனியின் கடைசி சீசன் ஓகே. மிகத் தெளிவாக உள்ளது. உங்களுக்குத் தெரியும், அவர் இந்த முழு சீசன் முழுவதும் விளையாடுகிறாரா? அல்லது முழு சீசன் முழுவதும் விளையாடாமல் இருந்தாலும், எல்லாவற்றையும் அவரது உடல் எவ்வாறு சமாளிக்கிறது என்பதைப் பொறுத்தது. அதை காலம் தான் தீர்மானிக்கும்.” என்று கூறியுள்ளார்.
தோனிக்கு கடைசி சீசனா?
தொடர்ந்து பேசிய அவர்,”எம்.எஸ்.தோனி ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்துள்ளார். அதை நான் நேரடியாக பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார். அண்மைக்காலமாக எம்.எஸ்.தோனிக்கு இதுதான் கடைசி சீசன் என்று கூறப்பட்டு வரும் சூழலில் ரவி சாஸ்திரி அவரது ஐ.பி.எல் எதிர்காலம் குறித்து பேசி உள்ளார். இது ரசிகர்கள் இடையே தோனிக்கு இது தான் கடைசி சீசனாக இருக்கும் என்பதை உறுதிபடுத்துவதாக தெரிகிறது. தோனி 42 வயதை கடந்து இருந்தாலும் இன்னும் பிட்னஸ் உடன் இருப்பதால் அவர் தொடர்ந்து ஐ.பி.எல் போட்டியில் விளையாடுவார இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.