17வது ஐபிஎல் சீசனின் 12வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். 


அதன்படி ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸை ட்ராவிஸ் ஹெட் மற்றும் மயாங்க் அகர்வால் தொடங்கினர். முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகளுடன் 11 ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தியது. ஹைதராபாத் அணி 4.2 ஓவரில் தனது முதல் விக்கெட்டினை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் மயாங்க் அகர்வால், வேகப்பந்து வீச்சாளர் ஓமர்சாய் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து எல்லைக்கோட்டின் அருகே கேட்ச் ஆகி வெளியேறினார். அவர் 17 பந்தில் 16 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் வந்த அபிஷேக் சர்மா அதிரடியாக சிக்ஸர்கள் விளாச, ஹைதராபாத் அணி பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 56 ரன்கள் சேர்த்தது. 


பவர்ப்ளேவிற்குப் பின்னர் தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது பந்தில் தனது விக்கெட்டினை க்ளீன் போல்ட் முறையில் வெளியேறினார். அதன் பின்னர் அபிஷேக் சர்மாவும் மார்க்ரமும் இணைந்து மூன்று ஓவர்கள் நிதானமாக ஆடினர். மோகித் சர்மா வீசிய போட்டியின் 10வது ஓவரின் கடைசிப் பந்தில் அபிஷேக் சர்மா மோசமான ஷாட் ஆடி தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 


அதன் பின்னர் களமிறங்கிய ஹென்றிச் க்ளாசன் தான் எதிர்கொண்ட முதல் பந்தினை பவுண்டரிக்கு விரட்ட, ஹைதராபாத் அணி ரசிகர்கள் உற்சாகமாக மாறினர். போட்டியின் 13வது ஓவரில் ஹென்றிச் க்ளாசன் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட ஹைதராபாத் அணி 100 ரன்களைக் கடந்தது. 


ஹென்றிச் க்ளாசன் தனது விக்கெட்டினை ரஷித் கான் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். ஹென்றிச் க்ளாசன் 14வது ஓவரில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேற, உமேஷ் யாதவ் வீசிய 15வது ஓவரில் எய்டன் மார்க்ரம் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 


15 ஓவர்களில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் சேர்த்தது. முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால் ஹைதராபாத் அணிக்கு ரன்ரேட் வெகுவாக குறைந்தது. இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டினை இழந்து 162 ரன்கள் சேர்த்தது. 


அதிகபட்சமாக ஹைதராபாத் அணி சார்பில் அபிஷேக் சர்மாவும் அப்துல் சமத்தும் 29 ரன்கள் குவித்தனர். ஹென்றிச் க்ளாசன் 13 பந்தில் 24 ரன்கள் சேர்த்தார். குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.