ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் தற்போது பேசிக்கொண்டு இருப்பது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியதுதான்.  ஹர்திக் பாண்டியேவே கேட்டுக்கொண்டதன் பேரில் மும்பை அணிக்கு அவரை விற்றதாக குஜராத் அணி தெரிவித்துள்ளது. ஹர்திக் பாண்டியா தனது ஐபிஎல் வாழ்க்கையை மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து தொடங்கியவர். 


ஹர்திக் பாண்டியா என்ற வீரர் முதன் முதலில் 2014ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் நுழைந்தபோது யாரும் அவரை வாங்கவில்லை. அதன் பின்னர் 2015ஆம் ஆண்டும் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை அவரின் அடிப்படை விலையான ரூபாய் 10 லட்சத்திற்கு வாங்கியது.  




2015 இல் அவர் விளையாடிய 9 போட்டிகளில் பாண்டியாவின் பவர் ஹிட்டிங் பேட்டிங் மும்பை அணிக்கு திருப்திகரமாக இருந்தது. ஆனால் இவரின் பயமற்ற ஆட்டம் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்க 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச போட்டியில் அறிமுகமானார். 




அன்றில் இருந்து இன்று வரை ஹர்திக் பாண்டியா இல்லாத இந்திய அணியை இப்போதுவரை பார்க்க முடியாது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் பெரிய ஏலத்திற்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை விதிகளுக்குட்பட்டு விடுவித்தது. இதனால் ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்கு அன்று இருந்த அணிகள் அனைத்தும் முயற்சி செய்தது. ஆனால் இறுதியில் மும்பை இந்தியனஸ் அணி ரூபாய் 11 கோடிக்கு வாங்கியது. 


ஹர்திக் பாண்டியா ரூ.10 லட்சத்திற்கு மும்பை அணி வாங்கியதால், 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளிலும் அதே தொகையை அதாவது ரூபாய் 10 லட்சத்தினை சம்பாதித்தார். 2018 ஆம் ஆண்டு மெகா ஏலம் நடந்தபோது அவரது வருமானம் 11 கோடியாக உயர்ந்தது. அதன் பின்னர் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தின் போது ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி விடுவித்தது. இதனால் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஹர்திக் பாண்டியாவை 2022ஆம் ஆண்டில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது. அப்போது குஜராத் அணி ஹர்திக் பாண்டியாவை ரூபாய் 15 கோடிக்கு வாங்கியது. 




அந்த ஆண்டே ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து குஜராத் அணி 2022ஆம் ஆண்டு கோப்பையை வென்று அசத்தியது. ஐபிஎல் வரலாற்றில் ஐபிஎல்-லீக்கின் முதல் லீக் இல்லாமல் அதன் பின்னர் அறிமுகமான அணிகளில் அறிமுக லீக்கிலேயே கோப்பையை வென்ற அணி என பெருமையைப் பெற்றது குஜராத் டைட்டன்ஸ். அணி ஹர்திக் பாண்டியாவைப் பொறுத்தவரையில் குஜராத் அணியை மிகவும் கூலாக கேப்டன்சி செய்து இரண்டு ஆண்டுகளும் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்தார். இவரின் சிறப்பான கேப்டன்சியை பார்த்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நிர்ணயம் செய்தது. தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கேப்டனாகக் கூட ஹர்திக் பாண்டியாதான் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் ஒருநாள் உலகக் கோப்பையின் போது அவருக்கு காயம் ஏற்படவே தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்தி வருகின்றார். 




ஹர்திக் பாண்டியாவைப் பொறுத்தவரையில் மும்பை இந்தியன்ஸ் அணி அவருடைய கிரிகெட் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான அணி. இவர் மீண்டும் மும்பை அணிக்கு திரும்பியுள்ளதால் மும்பை அணி மிகவும் பலமான அணியாக மாறியுள்ளது. மும்பை அணி தற்போது குஜராத் அணியிடம் இருந்து ரூபாய் 15 கோடிக்கு வாங்கியுள்ளது. இதுமட்டும் இல்லாமல் மும்பை அணி தன்னிடம் இருந்த ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனை பெங்களூருக்கு விற்றுள்ளது. 




ஹர்திக் பாண்டியா ஒரு அணிக்காக முதல் முறை களமிறங்கிய இரண்டு முறையும் அந்த அணி கோப்பையை வென்றுள்ளது. அதாவது 2015ஆம் ஆண்டு மும்பை அணிக்காக களமிறங்கினார். அந்த ஆண்டு மும்பை தனது இரண்டாவது கோப்பையை வென்றது. 2022ஆம் ஆண்டு குஜராத் அணிக்காக களமிறங்கினார் குஜராத் அணி தனது அறிமுக லீக்கிலேயே கோப்பையை வென்றது. இதுவரை ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்காக 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகள் என மொத்தம் 4 முறையும். அதன் பின்னர் 2022ஆம் ஆண்டு குஜராத் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்தார். இந்த வகையில் 5 கோப்பைகளை வென்ற வீரர்கள் வரிசையிலும் ஹர்திக் பாண்டியா உள்ளார்.