குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியே வாங்கியதாக ஐபிஎல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹர்திக் பாண்டியா, “ பழைய நினைவுகள் மனதில் தோன்றுகிறது. மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்ததில் மகிழ்ச்சி” என குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல்-லில் ஹர்திக் பாண்டியா:
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இதுவரை ஐபிஎல்லில் மொத்தம் 123 போட்டிகளில் விளையாடி 115 இன்னிங்ஸ்களில் 10 அரைசதங்கள் உள்பட 2309 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 81 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 53 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 3/17 ஆகும்.
ஹர்திக் பாண்டியா தனது தொடக்க ஐபிஎல் பயணத்தை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தொடங்கினார். கடந்த 2015ம் ஆண்டு அடிப்படை விலையான 10 லட்ச ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஹர்திக் பாண்டியா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதே ஆண்டு இவரது சிறப்பான பங்களிப்பால் மும்பை இந்தியன்ஸ் அணி 2015ம் ஆண்டு கோப்பையை வென்றது. தொடந்து, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இந்தநிலையில், கடந்த 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை விடுவித்தது. அன்றைய காலக்கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் கெய்ரோன் பொல்லார்ட் ஆகியோரை தக்கவைக்க முடிவு செய்தார்.
2 மணிநேரத்தில் மாறிய கதை:
ஹர்திக் பாண்டியா நேற்றைய ஐபிஎல் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிடப்பட்டபோது, குஜராத் டைட்டன்ஸ் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக தக்க வைத்துகொண்டதாக அறிவித்தது. இதையடுத்து, அடுத்த சீசனில் ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்காக விளையாடுவார் என்று நம்பப்பட்டது.
ஆனால், வெறும் 2 மணிநேரத்திலேயே மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை பெரிய வர்த்தக்கத்தின் மூலம் வாங்கியது. மறுபுறம், குஜராத் அணி தனது 8 வீரர்களை விடுவித்துள்ளது. அதன்படி, யாஷ் தயாள், கே.எஸ். பாரத், சிவம் மாவி, உர்வில் படேல், பிரதீப் சங்வான், ஓடியன் ஸ்மித், அல்சாரி ஜோசப் மற்றும் தசுன் ஷனகாவை வெளியிட்டது.
ஆர்ச்சரை விடுவித்த மும்பை இந்தியன்ஸ்:
நேற்றைய நாளில் மும்பை இந்தியன்ஸ் அணி 11 வீரர்களை விடுவித்தது. இதில் அர்ஷத் கான், ராமன்தீப் சிங், ஹிருத்திக் ஷௌகீன், ராகவ் கோயல், ஜோஃப்ரா ஆர்ச்சர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவான் ஜான்சன், ஜே ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், கிறிஸ் ஜோர்டான் மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோர் அடங்குவர். அதேபோல், கடந்த ஐபிஎல் சீசனில் 17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்ட கேமரூன் கீரின், ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.