மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் 17வது ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. களமிறங்கியுள்ள 10 அணிகளில் 9 அணிகள் தங்களது வெற்றிக் கணக்கைத் தொடங்கி புள்ளிப்பட்டியலில் முன்னேறிச் செல்வதற்கான பணிகளில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு அணி மிகவும் பரிதாபமான நிலைக்கு ஆளாகும்.


தொடர் தோல்வி:


அப்படி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இன்னும் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் மூன்று போட்டிகளில் விளையாடி, ஒரு போட்டியில் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைந்தது. ஒரு போட்டியில் இமாலய இலக்கை நோக்கி விளையாடித் தோற்றது. மூன்றாவது போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அணியாக உருவெடுத்துள்ளது மட்டும் இல்லாமல், அந்த போட்டியிலும் தோல்வியைத் தழுவியது. 


இதனால் மூன்று போட்டிகளில் விளையாடி ஹாட்ரிக் தோல்வியைத் தழுவிய மும்பை இந்தியன்ஸ், தற்போது புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் மிகவும் மோசமான ரன்ரேட்டுடன் உள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி இனி தனக்கு உள்ள 11 லீக் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றியை பெறுவது மட்டும் இல்லாமல், மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது. 


தொடர்ந்து போராடுவோம்:


இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விக்கு அந்த அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாதான் காரணம் என மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தொடங்கி, சர்வதேச அளவில் கிரிக்கெட் கமெண்ட்ரி செய்யும் ஜாம்பவான்கள் வரை தெரிவிக்கின்றனர். ஹர்திக் பாண்டியாவின் முடிவுகளும் அவ்வாறே இருப்பதால், அனைவரது பார்வையும் ஹர்திக் பாண்டியா மீது திரும்பியுள்ளது. 






இந்நிலையில் ஹாட்ரிக் தோல்விக்குப் பின்னர், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது அணியின் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ”இந்த அணியைப் பற்றி நீங்கள் ஒன்றை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எப்போதும் எங்கள் முயற்சிகளில் இருந்து பின்வாங்கப்போவதில்லை. நாங்கள் தொடர்ந்து போராடுவோம், நாங்கள் தொடர்ந்து முன்னேறுவோம்” என தெரிவித்துள்ளார். 


மும்பை இந்தியன்ஸ் அணி தனது அடுத்த போட்டியில் வரும் 7ஆம் தேதி, டெல்லி அணிக்கு எதிராக தனது சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியிலாவது மும்பை அணி வெற்றி பெறுமா? ஹர்திக் பாண்டியா தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பாரா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுள்ளனர்.