ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 


மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா களமிறங்கியது முதலே, ரசிகர்கள் பாண்டியாவை குறிவைத்து வசைபாட தொடங்கினர். மேலும், முன்னாள் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக ரோஹித் - ரோஹித் என்று ஸ்டேடியம் முழுவதும் பலத்த கோஷங்கள் எழுந்தது. இந்தநிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ இன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், ஹர்திக் பாண்டியா ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் இதயத்தை உடைக்கும் ஒரு செயலை செய்துள்ளார். 


சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில் ஹர்திக் பாண்டியா, பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸியுடன் இணைந்து பீல்டிங்கை அமைத்து கொண்டிருந்தனர். அப்போது, சர்க்கிளுக்குள் பீல்டிங்கில் இருந்த ரோஹித் சர்மாவை, லைனில் நிக்குமாறு அதிகாரமாக சொன்னார். முதலில் யாரை ஹர்திக் சொல்லுகிறார் என்று புரியாமல் நின்ற ரோஹித் சர்மா, ஹர்திக்கின் அறிவுறுத்தல்களை பெற்ற  பிறகும் ரோஹித் லைன் நோக்கி ஓடினார். இதற்கு பிறகு மீண்டும் ஹர்திக், பீல்டிங் பொஷிசனை மாற்றும்படி ரோஹித் சர்மாவை ஆர்டர் போட்டார். சமூக வலைதளங்களில் ரோஹித்திடம் ஹர்திக் நடந்துகொண்ட விதம் ரசிகர்களுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. இதையடுத்து, ரசிகர்கள் ரோஹித் சர்மா, அடுத்த வருடம் வேறொரு அணிக்கு சென்று விடுங்கள் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். 






சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா: 


குஜராத் அணிக்கு எதிரான 169 ரன்களை இலக்காக துரத்திய மும்பை இந்தியன்ஸு அணிக்கு தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்கினார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 29 பந்துகளில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உதவியுடன் 43 ரன்களை விளாசினார். 






தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸ்: 


ஐபிஎல் 2024 முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது. குஜராத் அளித்த 169 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி 9 விக்கெட்களை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வெற்றிக்காக மும்பை அணிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்டியா முதல் இரண்டு பந்துகளில் 10 ரன்கள்  எடுக்க, அடுத்த இரண்டு பந்துகளில் 2 விக்கெட்களை எடுத்து உமேஷ் யாதவ் குஜராத் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.