ஐ.பி.எல் 2024:


17 வது ஐ.பி.எல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இன்று (மார்ச் 31) நடைபெற்ற 12 வது லீக் போட்டியில்  குஜராத் டைட்டன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த வகையில் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ட்ராவிஸ் ஹெட் மற்றும் மயாங்க் அகர்வால் களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகளுடன் 11 ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தியது.


குஜராத் vs ஹைதராபாத்:


அப்போது தொடக்க ஆட்டக்காரர் மயாங்க் அகர்வால் விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த வகையில் மொத்தம் 17 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 16 ரன்கள் எடுத்தார். அப்போது அபிஷேக் சர்மா ட்ராவிஸ் ஹெட்டுடன் ஜோடி சேர்ந்தார். கடந்த போட்டியைப் போலவே தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் அபிஷேக். 


 


இதனிடையே, தொடக்க ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் நூர் அகமது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் மொத்தம் 14 பந்துகள் களத்தில் நின்ற 3 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 19 ரன்கள் எடுத்தார். ஐடன் மார்க்ராம் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த் அபிஷேக் சர்மாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதனிடையே அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 29 ரன்கள் குவித்து விக்கெட்டை பறிகொடுத்தார். இவரது விக்கெட்டிற்கு பிறகு களம் இறங்கிய ஹென்ரிச் கிளாசென் சிறப்பாக விளையாடினார்.


அந்த வகையில் அவருடைய பங்கிற்கு 1 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என மொத்தம் 24 ரன்கள் எடுத்தார். இச்சூழலில் ஐடன் மார்க்ராம் 17 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னார் வந்த ஷாபாஸ் அகமது மற்றும் அப்துல் சமது இருவரும் அதிரடியாகவே விளையாடினார்கள். இதில் ஷாபாஸ் அகமது 22 ரன்களும் அப்துல் சமது 29 ரன்களும் எடுத்தனர். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8  விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.


 


குஜராத் அணியின் அதிரடி தொடக்கம்:


163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அந்த அணிக்கு அருமையான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். அதன்படி 36 ரன்களில் தான் அந்த அணி முதல் விக்கெட்டை இழந்தது. அந்தவகையில் விருத்திமான் சாஹா மொத்தம் 13 பந்துகள் களத்தில் நின்று  1 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என மொத்தம் 25 ரன்கள் எடுத்தார். இவரது விக்கெட்டிற்கு பின்னர் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார் சாய் சுதர்சன். இவர்களது ஜோடி மளமளவென அந்த அணிக்கு ரன்களை சேர்த்துக்கொடுத்தது. 


 


இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் விக்கெட்டை பறிகொடுத்தார். மொத்தம் 28 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 36 ரன்கள் எடுத்தார். பின்னர் டேவிட் மில்லர் சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்தார். மறுபுறம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துகளை பறக்கவிட்டுக்கொண்டிருந்தார் சாய் சுதர்சன். அதன்படி , 36 பந்துகள் களத்தில் நின்ற அவர் 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 45 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர் மற்றும் விஜய் சங்கரும் சிறப்பாக விளையாடினார்கள். கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணிக்கு குஜராத் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார் டேவிட் மில்லர். அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.