கிரிக்கெட் உலகத்தில் அதிக மக்களால் பார்க்கப்படும் லீக் தொடர் என்றால் அது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர்தான். 2008-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகரமாக இந்த தொடரை பல்வேறு சவாலான சூழல்களுக்கு மத்தியிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தி வருகின்றது. 


இந்நிலையில் இந்த ஆண்டு அதாவது 2024ஆம் ஆண்டில் 17-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை நடத்திவருகின்றது. இதில் மொத்தம் 10 அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றது. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய இந்த லீக் தொடர் வரும் 26ஆம் தேதி முடிவடையவுள்ளது. தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த லீக் சுற்றுப் போட்டிகளில் இதுவரை மொத்தம் 57 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. இதன் முடிவில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியுள்ளது. 


இதில் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி வரும் 13ஆம் தேதி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வழக்கமாக அணியும் ஜெர்சியை அணிந்து கொண்டு விளையாடாமல், லாவெண்டர் நிறத்தில் ஜெர்சி அணிந்து கொண்டு விளையாடவுள்ளனர். இதற்கான காரணமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறியவும் மற்றும் தரமான மருத்துவத்தை அவர்களுக்கு அளிக்கவும் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும்” இந்த லாவண்டர் நிற ஜெர்சியை அணிந்து கொண்டு விளையாடவுள்ளனர். குஜராத் அணியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.


கடந்த ஆண்டு தங்களது சொந்த மைதானத்தில் விளையாடிய கடைசி லீக் போட்டியில் குஜராத் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இதுபோன்று லாவண்டர் ஜெர்சி அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஆண்டும் தங்களது சொந்த மைதானத்தில் கடைசியாக விளையாடும் லீக் போட்டியில் குஜராத் அணி லாவண்டர் நிற ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது. 


குஜராத் அணி தனது அடுத்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நாளை அதாவது மே 10ஆம் தேதி விளையாடவுள்ளது. இந்த போட்டிக்கு அடுத்து கொல்கத்தா அணிக்கு எதிராக குஜராத் அணி களமிறங்குகின்றது. இதையடுத்து இந்த சீசனில் தனது கடைசி லீக் போட்டியில் குஜராத் அணி சன்ரைசர்ஸ்  ஹைதராபாத் அணிக்கு எதிராக வரும் 16ஆம் தேதி ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதவுள்ளது. இந்த மூன்று போட்டிகளிலும் குஜராத் அணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றால் ப்ளேஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பில் நீடிக்கலாம். ஆனால் அதற்கு மற்ற போட்டிகளின் முடிவும் மிகவும் அவசியம்.