IPL 2024 GT vs DC: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ன் 32வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 89 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக ரஷித் கான் 31 ரன்கள் எடுத்திருந்தார். வேறு எந்த பேட்ஸ்மேனும் 15 ரன்களை கூட கடக்க முடியவில்லை. சாய் சுதர்ஷன் 12 ரன்களும், ராகுல் தெவாடியா 10 ரன்களும் எடுத்திருந்தனர். டெல்லி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்களையும், இஷாந்த் சர்மா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 


90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 8.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது. 


டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் ஃப்ரேசர்  10 பந்துகளில் 20 ரன்களும், ஹாய் ஹோப் 10 பந்துகளில் 19 ரன்களும், கேப்டன் ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 16 ரன்களும் எடுத்திருந்தனர். குஜராத் அணியில் அதிகபட்சமாக சந்தீப் வாரியர் 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். பந்துகளின் அடிப்படையில் டெல்லி கேபிடல்ஸ் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. எனவே டெல்லி-குஜராத் போட்டியில் எந்தெந்த தனித்துவமான சாதனைகள் படைக்கப்பட்டன என்பதை தெரிந்து கொள்வோம். 


குஜராத் அணியின் குறைந்த ரன் எண்ணிக்கை: 


டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியால் 100 ரன்கள் கூட எடுக்க முடியவில்லை. கில் தலைமையிலான குஜராத் அணி 17.3 ஓவரில் 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இது ஐபிஎல்லில் குஜராத்தின் குறைந்தபட்ச ஸ்கோராகும். 


டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மிகப்பெரிய வெற்றி:


90 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8.5 ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் 67 பந்துகளுக்கு மீதம் வைத்து வெற்றி பெற்றது. மீதமிருந்த பந்துகள் அடிப்படையில் டெல்லியின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். முன்னதாக, கடந்த 2022ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 57 பந்துகள் மீதமுள்ள நிலையில் மும்பை அணியை வீழ்த்தியது.


ஐபிஎல்லில் 90+ இலக்கைத் துரத்த குறைந்த ஓவர்கள்: (20 ஓவர் போட்டி)


20 ஓவர் ஐபிஎல் போட்டியில் 90 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை இலக்காக துரத்திய போது, ​​மிகக் குறுகிய ஓவர்களில் துரத்தப்பட்டு வெற்றிபெற்ற மூன்றாவது வெற்றி இதுவாகும். டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8.5 ஓவரில் வெற்றியை பதிவு செய்தது. 


ஐபிஎல் 2024ல் டெல்லி அணி பவர் பிளே மோசமான நிலை: 


இதுவரை ஐபிஎல் 2024ல் டெல்லி கேபிடல்ஸ் அணி பவர் பிளேயில் மட்டும் அதிக விக்கெட்டுகளை இழந்துள்ளது. பவர் பிளேயில் இதுவரை டெல்லி அணி மொத்தமாக 13 விக்கெட்டுகளை விட்டுகொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


தினேஷ் கார்த்திக்கின் சாதனையை சமன் செய்த ரிஷப் பண்ட்: 


குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்தார். மொத்தம் நான்கு பேட்ஸ்மேன்களை விக்கெட்டுக்கு பின்னால் இருந்து பெவிலியனுக்கு அனுப்பினார். அதாவது, இரண்டு கேட்ச் மற்றும் இரண்டு ஸ்டம்பிங் என மொத்தம் 4 பேரை அவுட் செய்தார். இதன் மூலம் தினேஷ் கார்த்திக்கின் சாதனையை சமன் செய்தார் பண்ட். கடந்த 2009ம் ஆண்டு டெல்லி அணிக்காக தினேஷ் கார்த்திக் விளையாடிய போது, ​​ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4 பேட்ஸ்மேன்களை விக்கெட்டுக்கு பின்னால் இருந்து அவுட் செய்தார்.