17வது சீசன் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது மூன்றாவது கோப்பையை வென்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணி விளையாடிய இரண்டு இறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. 


வெற்றிக்குப் பின்னர் கொல்கத்தா அணி வீரர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர். குறிப்பாக கொல்கத்தா அணியின் அனைத்து வீரர்களும் கொல்கத்தா அணியின் ஆலோசகரான கம்பீரைக் கட்டிப்பிடித்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டதோடு மகிழ்ச்சியையும் பரிமாறிக்கொண்டனர். குறிப்பாக சுனில் நரைனும் அண்ட்ரே ரஸலும் கம்பீரை தூக்கிக் கொண்டு தங்களது அன்பை வெளிப்படுத்தினர். 






போட்டியை நேரில் காண வந்திருந்த அணியின் உரிமையாளர் ஷாரூக் கான், கொல்கத்தாவின் வெற்றிக்குப் பின்னர் கேலரியில் இருந்து மைதானத்திற்கு வந்து வீரர்களை வாழ்த்திக்கொண்டு இருந்தார். இதனிடையே கம்பீருக்கு அவரது நெற்றியில் முத்தம் கொடுத்தார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி இரண்டு முறை (2012 மற்றும் 2014) ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் அவரது ஆலோசனையில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கொல்கத்தா அணி தனது மூன்றாவது கோப்பையை வென்றுள்ளது.