இறுதிப் போட்டி:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐபிஎல் சீசன் 17. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த சீசனில் இன்று (மே26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் ட்ராவிஸ் ஹெட் களம் இறங்கினார்கள்.
ஏமாற்றிய அபிஷேக் சர்மா:
இந்த தொடரில் சிறப்பாக விளையாடி எதிரணி பந்து வீச்சாளர்களை மிரட்டிய அபிஷேக் சர்மா இன்றைய போட்டியிலும் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தார். அதாவது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் கிளின் போல்டாகி வெளியேறினார்.
முன்னதாக இந்த சீசனில் அபிஷேக் சர்மா 15 இன்னிங்ஸ்களில் விளையாடி 207.76 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 482 ரன்களை குவித்திருக்கிறார். இதில் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்திருக்கிறார். அதேபோல் இந்த சீசன் முழுவதும் மொத்தாமாக மூன்று அரைசதங்களையும் பதிவு செய்திருக்கிறார் அபிஷேக் சர்மா.
சோகமான காவ்யா மாறன்:
இப்படி கடந்த போட்டிகளில் எல்லாம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சர்மா இறுதிப் போட்டியில் போல்ட் ஆகி வெறும் 2 ரன்களில் வெளியேறினார். அடுத்து சில நொடிகளில் ட்ராவிஸ் ஹெட் டக் அவுட் ஆனார். பின்னர் வந்த ராகுல் திரிபாதியும் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். அவருக்கு அடுத்து களமிறங்கி மார்க்ரமிற்கு ஒத்துழைப்பு அளித்து வந்த நிதிஷ்ரெட்டி 13 ரன்களுக்கு அவுட்டானார்.
47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் அணி தடுமாறி வருவதால் சன்ரைசர்ஸ் அணி உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.