இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 35வது போட்டியில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கின்றன. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது இரவு 7 மணிக்கு டெல்லியிலுள்ள முன்னதாக ஃபிரோஸ் ஷா கோட்லா மைதானம் என்று அழைக்கப்பட்ட டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. 


டெல்லி கேப்பிடல்ஸ் இந்த சீசனில் முதல் முறையாக தனது சொந்த ஸ்டெடியத்தில் விளையாடுகிறது. அதேநேரத்தில், தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்று ஹைதராபாத் அணி டெல்லியை எதிர்கொள்கிறது. 


பிட்ச் ரிப்போர்ட்: 


டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியம் மெதுவான பிட்சாகும். இங்கு ஸ்பின்னர்கள் சிறப்பாக பந்துவீசலாம். இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறுவார்கள். ஸ்டேடியன் சிறியது என்பதால் இங்கு பவுண்டரிகளும், சிக்ஸர்களும் எளிதாக அடிக்கலாம். அதற்கு, பேட்ஸ்மேன்கள் அவசரமின்றி பொறுமையாக செட்டில் ஆகி, அதன்பின் ரன் வேட்டை தொடங்கலாம். 


ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மொத்தம் 85 போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 38 வெற்றிகளையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 46 வெற்றிகளையும் பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 167 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 152 ரன்களாகவும் உள்ளது.


இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்: 


ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் 23 போட்டிகளில் மோதியுள்ளன. அதில், அதிகபட்சமாக ஹைதராபாத் அணி 12 போட்டிகளிலும், டெல்லி அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராக 207 ரன்கள் உள்ளது. அதேநேரத்தில், டெல்லி அணிக்கு எதிரான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 219 ரன்களை குவித்துள்ளது. 


கடைசி 5 போட்டிகளில் யார் அதிகமாக ஆதிக்கம்..? 



  • 2023 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

  • 2022 - டெல்லி கேப்பிடல்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

  • 2022 - டெல்லி கேப்பிடல்ஸ் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

  • 2021 - டெல்லி கேப்பிடல்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

  • 2021 – போட்டி டை ஆனது (சூப்பர் ஓவரில் டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றது)


புள்ளிப்பட்டியலில் இரு அணிகளும் எப்படி..? 


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில் 4 வெற்றி மற்றும் 2 இல் தோல்வியடைந்துள்ளது. அந்த அணி 8 புள்ளிகளுடன் தற்போது புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 7 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று 4ல் தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி மொத்தம் 6 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. 


கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 


டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ராம், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கம்மின்ஸ்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், டி நடராஜன்


டெல்லி கேப்பிடல்ஸ்: 


பிருத்வி ஷா, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஷாய் ஹோப், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர் & கேப்டன்), அக்சர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், கலீல் அகமது