குஜராத் டைட்டன்ஸ் அணியினை அதன் சொந்த மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியதற்கு முக்கிய காரணமாக, இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய அசுதோஷ் சர்மாவும் முக்கிய காரணமாக இருந்தார்.


அசுதோஷ் சர்மா தொடர்பாக இந்த தொகுப்பில் காணலாம். 


குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற அசுதோஷ் சர்மா முக்கிய பங்களிப்பை வழங்கினார்.  நடப்பு ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த போட்டியில், அசுதோஷ் ஷ்ர்மா 17 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 31 ரன்கள் எடுத்து சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார்.


இந்த இன்னிங்ஸ் பஞ்சாப் அணி நெருக்கடியில் இருந்தபோது அசுதோஷிடமிருந்து வெளிவந்ததால் வழக்கத்தை விடவும் கூடுதலாக கவனிக்கப்பட்டுள்ளது. இதனால் அசுதோஷ் சர்மா யார் என்ற கேள்வியும் பலரது மனதில் எழுந்துள்ளது. ஐபிஎல் போன்ற உலக கவனம் பெற்ற லீக் போட்டிகளுக்கு வருவதற்கு முன்னர் அசுதோஷ் சர்மா 11 பந்துகளில் அரைசதம் அடித்த சாதனையையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அசுதோஷ் சர்மா யார்?


அசுதோஷ் சர்மா செப்டம்பர் 15, 1998 அன்று மத்தியப் பிரதேசத்தின் ரத்லமில் பிறந்தார். ரயில்வேக்காக முதல் தர கிரிக்கெட் விளையாடி வருகின்றார். அதேநேரத்தில் மத்திய பிரதேசத்திற்காக மட்டுமே உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார் அசுதோஷ் சர்மா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய பிரதேச அணியை விட்டு வெளியேற வேண்டும் என அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். சந்திரகாந்த் பண்டிட் மத்தியப் பிரதேசத்தின் பயிற்சியாளராக ஆனபோது, ​​அசுதோஷுக்கு மாநில அணியிலிருந்து வெளியேறிய ரயில்வே அணியில் விளையாட வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது, அதன் பிறகு அவர் ரயில்வே அணியில் சேர்ந்தார்.


இந்தியாவுக்காக விளையாடிய நமன் ஓஜா, அசுதோஷ் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு   பெரிதும் உதவியதாக கூறப்படுகிறது. அசுதோஷ் சிறுவயதில் நமன் ஓஜாவின் தீவிர ரசிகராக இருந்தார். நமன் ஓஜாவும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


11 பந்துகளில் விளாசப்பட்ட அரை சதம்


கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபியில் 11 பந்துகளில் அரை சதம் அடித்து யுவராஜ் சிங்கின் சர்வதேச  சாதனையை முறியடித்து அசத்தினார் அசுதோஷ் சர்மா. சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரின் குரூப் சி போட்டியில், அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக 11 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.


இதன் மூலம் யுவராஜ் சிங்கின் 16 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரை சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.