இன்றைய ஐபிஎல் போட்டியில், முதல் போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய பெங்களூரு அணியில், ஆரம்ப முதலே அதிரடி ஆரம்பித்தது
அட்டாக் பண்ணிய ஆரம்ப பிளேயர்கள்:
ஓப்பனராக களமிறங்கிய விராட் கோலி மற்றும் டுப்ளஸிஸ் அதிரடியாக ஆடி வந்த நிலையில், 3 வது ஓவரில் அவுட்டானார். 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக களமிறங்கிய ஜேக்ஸும் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார்.
முதல் 5 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டை இழந்து 48 ரன்கள் சேர்த்து. ஜேக்ஸ்-விராட் ஜோடி பேட்டிங்கானது, ஆர்.சி.பி ரசிகர்களுக்கு குதூகலத்தை குடுத்ததை என்றே சொல்லலாம். 10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டை இழந்து 98 ரன்கள் சேர்த்தது.
அரைசதம் கடந்த ஜோடி:
சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 31 பந்தில் தனது அரை சதத்தை எட்டினார். இந்த ஜோடியானது 59 பந்தில் 100 ரன்களை எட்டியது. இந்நிலையில், நானும் சலைத்தவர் இல்லை என 31 பந்தில் தனது அரை சதத்தை எட்டினார் வில் ஜேக்ஸ்.
மிரட்டிய ஜேக்ஸ்; மிரண்ட விராட்:
அடுத்துதான் பலத்தை காண்பிக்க ஆரம்பித்தார் ஜேக்ஸ். ஆட்டத்தின் 15வது ஒவரில் மட்டும் வில் ஜேக்ஸ் மூன்று சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரி பறக்கவிட்டார். 16வது ஓவரில் வில் ஜேக்ஸ் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி பறக்கவிட்டார். 31 பந்துகளில் அரைசதம் எட்டிய வில் ஜேக்ஸ் அடுத்த 10 பந்துகளில் சதத்தை எட்டினார். அதாவது அடுத்த 10 பந்துகளில் 48 ரன்களை எடுத்து அதிரடி காட்டினார். வில் ஜேக்ஸ் இந்த ஆட்டத்தில் 5 பவுண்டரி மற்றும் 10 சிக்சர்களை விளாசினார்.
கடைசி 10 பந்துகளில், ஜேக்ஸ் 48 ரன்கள் எடுத்ததை பார்த்த ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர். களத்தில் இருந்த விராட் கோலி, ஜேக்ஸின் அதிரடி ஆட்டத்தை பார்த்து மிரண்டே விட்டார் என்றார் சொல்லாம்.
அதாவது மாலை 6.42 க்கு ஜேக்ஸின் அரைசதத்தை கொண்டாடிய கோலி, 6. 48 க்கு ஜேக்சின் சதத்தை கொண்டாடினார் என்றால், நினைத்து பாருங்கள் 6 நிமிடத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று.
கடைசி 2 ஓவர்களில் ஜேக்ஸ் அடித்த ஒவ்வொரு சிக்சுக்கும், விராட் கோலியின் ரியாக்சனே வேற லெவலில் இருந்தது. 16 வது ஓவரின் இறுதியில் 1 ரன் எடுத்தால் வெற்றி, அதேபோல 6 ரன் எடுத்தால் ஜேக்ஸ் சதம் என இருந்த நிலையில், அந்த பந்தை சிக்சருக்கு பறக்க விட அரங்கமே அதிர்ந்தது.